2014-06-04 14:59:04

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஜூன் 04,2014. அன்பு நேயர்களே, உரோம் நகரத்தை, சிறப்பாக வத்திக்கான் பகுதியை எப்பொழுது நோக்கினும், திருப்பயணிகள் கூட்டம் நிறைந்திருக்கும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகத்தைக் கேட்டு அவரின் ஆசீர் பெற்றுச் செல்வதற்காக, இப்புதனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நுழைவதற்காக, அதிகாலையிலே பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் அவ்வளாகத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு வளாகத்திற்குத் திறந்த காரில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியின் ஏழு கொடைகளில் ஒன்றான பக்தி எனும் கொடை குறித்து விளக்கினார். அன்புச் சகோதர சகோதரிகளே, தூய ஆவியின் ஏழு கொடைகள் பற்றிய நமது மறைக்கல்விப் போதகத்தில் இன்று பக்தி எனும் கொடை குறித்து நோக்குவோம் என, தனது RealAudioMP3 இப்புதன் பொது மறைபோதகத்தைத தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய ஆவி அருளுகின்ற பக்தி எனும் கொடை வழியாக, கடவுளாம் நம் தந்தையின் அன்புறவை மகிழ்வோடும், நன்றியோடும் நாம் எப்போதும் புதிதாக அனுபவிக்கிறோம். இவ்வுறவு, தந்தையின் மகனாகிய இயேசுவில் நமக்கு வழங்கப்பட்டது. இந்த அன்புறவு, நமது உண்மையான கடவுள் வழிபாட்டுக்கு அடித்தளமாக இருந்து அதை நிறைவு செய்கிறது. தூய ஆவியால் நம் இதயங்களில் பொழியப்பட்ட அன்பு, ஆண்டவரின் பிரசன்னத்தையும், அன்பையும் நமது வாழ்வில் உணரச் செய்கின்றது. அதோடு, செபத்திலும், ஆராதனையிலும் மகிழ்வோடு பதிலளிக்க நம்மை இட்டுச் செல்கின்றது. பக்தி என்பது, வெறும் வெளிப்படையான பக்தி முயற்சியல்ல. தூய ஆவியின் கொடையாகிய இந்தப் பக்தி, உண்மையான ஆன்மீக உணர்வாகும். இது, வானகத் தந்தையின் உண்மையான பிள்ளைகளாக அவரிடம் செல்ல வைக்கும் பக்தியாகும். பிறரன்பில் வளர்வதற்கும், பிறரை, நம் சகோதர சகோதரிகளாகவும், அவர்கள் கடவுளின் குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் அவர்களை நோக்கச் செய்யும் பக்தியாகும். கிறிஸ்துவின் திருவுடலாம் திருஅவையின் ஒன்றிப்பில், கடவுளோடு பிறக்கும் நமது தோழமையின் மகிழ்வான உணர்வில், நாம் எப்பொழுதும் பிறருக்கு உதவும் கரங்களாக நம்மை வழங்குவதற்குத் தயாராக இருப்பதற்கு, தூய ஆவியின் இந்தக் கொடை வழியாக நாம் இறைஞ்சுவோம்.
இவ்வாறு இப்புதன் பொது மறைக்கல்விப் போதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், RealAudioMP3 உயிர்த்த ஆண்டவரின் அமைதியும், தூய ஆவியின் பல்வேறு கொடைகளும் திருப்பயணிகள்மீது பொழியப்படுமாறு செபித்து, எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.