2014-06-04 14:59:29

இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி


ஜூன்,04,2014. இத்திங்கள் காலை உரோம் நகரில் இறைவனடி சேர்ந்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், இவ்வியாழன் காலை 11.30 மணிக்கு சிறப்புத் திருப்பலி ஒன்று நடைபெறும்.
வத்திக்கான் திருப்பீடத்தில் நற்செய்தி அறிவுப்புப்பணி பேராயத்தின் செயலராக 10 ஆண்டுகளும், பின்னர், கர்தினாலாக கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவராக 7 ஆண்டுகளும் பணியாற்றி ஒய்வுபெற்ற கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல், கடந்த இரு நாட்களாக வத்திக்கானில் உள்ள புனித ஸ்தேவான் சிற்றாலயத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழன் காலை, கர்தினால்கள் குழுவின் தலைவரான கர்தினால் Angelo Sodano அவர்கள் ஆற்றும் திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறுதி செபங்களைக் கூறி, கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடலை அர்ச்சிப்பார்.
இதன்பின், கர்தினால் அவர்களின் உடல் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு, புதுச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராலயத்தில் ஜூன் 9ம் தேதி, திங்களன்று இறுதி அடக்கத் திருப்பலியும், அடக்கச் சடங்குகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் லூர்துசாமி அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 214 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் 118 கர்தினால்கள் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள். ஏனைய 96 கர்தினால்கள், 80 வயதைக் கடந்தவர்கள்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.