2014-06-04 14:59:51

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டுள்ள அருள் பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம் குமார் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் தெற்காசிய இயேசு சபை


ஜூன்,04,2014. ஆப்கானிஸ்தான் நாட்டில் இத்திங்களன்று அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ள தமிழக இயேசு சபை அருள் பணியாளர் அலெக்ஸிஸ் பிரேம் குமார் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் தெற்காசிய இயேசு சபை பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மறைபரப்புப் பணிகளுக்குப் பொறுப்பாளராக இருக்கும் அருள் பணியாளர் Giuseppe Moretti அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில், இக்கடத்தல் குறித்து ஊடகங்கள் தேவையற்ற விவரங்களை வெளியிட வேண்டாம் என்றும், இந்நேரத்தில் செபத்தின் வல்லமையால் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயலவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
JRS எனப்படும் புலம்பெயர்ந்தோர் பணி இயேசு சபை அமைப்பின் சார்பில் James Stapleton என்பவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இயேசு சபையினர் மேற்கொண்டுள்ள கல்விப்பணியை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் என்றும், மக்களின் உதவியுடன் அருள் பணியாளர் பிரேம் குமார் அவர்களை விடுவிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
47 வயதான அருள் பணியாளர் பிரேம் குமார் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். அவரைக் கடத்தியவர்கள் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
2000மாம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலை பெற்ற பிரேம் குமார் அவர்கள், கொடைக்கானல் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர், மற்றும் பழங்குடியினர் மத்தியில் பணி புரிந்தவர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, இயேசு சபையினரால் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோர் பணி அமைப்பில் இணைந்து, இலங்கை மக்களுக்காகவும், தற்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்காகவும் பணியாற்றி வருகிறார்.
மேலும், அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, ஒரு மனிதரை ஆப்கான் படைவீரர்கள் கைது செய்துள்ளனர். அருள்பணியாளர் பிரேம் குமார் அவர்கள் Gilan மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.