2014-06-03 17:20:04

திருத்தந்தை பிரான்சிஸ் - குழந்தைகள் தேவையில்லை என்று கூறும் திருமணத் தம்பதியர் செல்ல மிருகங்களை வளர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானம்


ஜூன்,03,2014. திருமண வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், குழந்தைகள் தேவையில்லை என்று தீர்மானிக்கும் சிலர், சில வேளைகளில், குழந்தைகளுக்குப் பதில் செல்ல மிருகங்களை வளர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்மானம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் திருப்பலியில், திருமண வாழ்வில் 25 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள் இணைந்திருக்கும் பல திருமணத் தம்பதியர் கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகள் திருமண உறவில் இணைந்திருக்கும் தம்பதியருக்காக இறைவனுக்கு நன்றி கூறியத் திருத்தந்தை, பிரமாணிக்கமாக இருப்பது, தொடர் முயற்சிகள் மேற்கொள்வது, பலன்கள் தருவது ஆகியவை, திருமண வாழ்வுக்கு இன்றியமையாத பண்புகள் என்று எடுத்துரைத்தார்.
திருமணத்தின் பலன்களில் ஒன்றான குழந்தைப்பேறு இன்றி தவிப்போரை எண்ணி அவர்களுக்காகச் செபிக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வசதிக்காக, தாங்கள் பல நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக குழந்தைகள் தேவையில்லை என்று முடிவெடுக்கும் தம்பதியரின் எண்ணங்களைக் கேள்விக்குள்ளாக்கினார்.
குழந்தைகள் தேவையில்லை என்ற முடிவுடன் வாழ்வோர், வயது முதிர்ந்த காலத்தில், தனிமையிலும், கசப்பிலும் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நிலையில் துன்பப்படுகின்றனர் என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.