2014-05-30 16:56:45

புனிதரும் மனிதரே : கைம்பெண்களின் மகிமை (புனித Olympia)


கான்ஸ்டான்டிநோபிளில் புகழ்பெற்ற பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த ஒலிம்பியாஸ் இளவயதிலேயே பெற்றோரை இழந்தார். பெருமளவான சொத்துக்கள் இவர் பெயரில் இருந்தன. தனது மாமாவிடம் வளர்ந்த இவருக்கு இளவயதிலேயே திருமணமும் நடந்தது. கான்ஸ்டான்டிநோபிள் ஆளுனர் Nebridius என்பவர் ஒலிம்பியாஸின் வாழ்க்கைத் துணைவரானார். திருமணமான சில காலத்திலேயே கணவரை இழந்தார். குழந்தைகளும் பிறக்கவில்லை. எனவே தனிமரமானார். அதன்பின்னர் கான்ஸ்டான்டிநோபிள் பேரரசர், ஒலிம்பியாசின் கணவர் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். பலர் இவரைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினர். ஆனால் ஒலிம்பியாஸ் மறுமுறையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. தனது வாழ்வைத் திருஅவைப் பணிக்கென அர்ப்பணிக்கவும் தீர்மானித்தார். தனது சொத்துக்களை வைத்து ஆலயங்கள் கட்டுவதற்கும் ஏழைகளுக்குமெனச் செலவழித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பேரரசின் பெரும் பகுதியையும் இதற்கென ஒதுக்கினார். புனித கிறிஸ்சோஸ்தமின் வழிகாட்டுதலில் வாழ்வை நடத்திய ஒலிம்பியாஸ், அப்புனிதர் நாடு கடத்தப்பட்டபோது எல்லா வழிகளிலும் ஆதரவாக இருந்து உதவினார். இறுதியில் ஒலிம்பியாசும் நாடு கடத்தப்பட்டு 408ம் ஆண்டில் இறந்தார். புனித ஒலிம்பியாஸ், 360ம் ஆண்டில் Nicomediaவில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கீழை வழிபாட்டுமுறைகளில் கைம்பெண்களின் மகிமையாகப் போற்றப்படுகிறார் புனித ஒலிம்பியாஸ். புனித ஜான் கிறிஸ்சோஸ்தமின் பக்தியுள்ள, பிறரன்புமிக்க மற்றும் பணக்காரச் சீடராக விளங்கியவர் புனித ஒலிம்பியாஸ். இவரது விழா கிரேக்கத் திருஅவையில் ஜூலை 24ம் தேதியும், உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் டிசம்பர் 17ம் தேதியும் சிறப்பிக்கப்படுகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.