2014-05-30 16:28:29

திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை


மே,30,2014. கிறிஸ்தவ வாழ்வு ஒரு விழாக் கொண்டாட்டம் அல்ல, மாறாக, அது நம்பிக்கையில் எழும் மகிழ்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை ஆற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.
புனித பூமி பயணத்தையொட்டி, கடந்த சில நாட்களாகத் தடைபட்டிருந்த தன் காலைத் திருப்பலியை இவ்வெள்ளியன்று மீண்டும் தொடர்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை என்று கூறியத் திருத்தந்தை, இம்மகிழ்வு நம்பிக்கையிலிருந்து பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தினார்.
திருத்தூதர் பவுல் அடியார், துணிவுடன் கிறிஸ்துவை அறிவித்தார் எனினும், அவர் மனதிலும் அச்சங்கள் சூழ்ந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இருப்பினும், அவர் இவ்வுலக நியதிகளோடு சமரசம் செய்துகொள்ளாமல், தன் அறிவிப்புப்பணியைத் தொடர்ந்தார் என்று கூறினார்.
நோயுறுதல், போதிய ஊதியம் இல்லாமை, குடும்பத்தில் உருவாகும் உறவுப் பிரச்சனைகள் என்ற பல எடுத்துக்காட்டுகளைக் கூறியத் திருத்தந்தை, இத்துன்பங்களைக் கண்டு, நமக்கு எதிரானவர்கள் மகிழக்கூடும்; இருப்பினும், இத்துன்பங்கள் மத்தியில் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையே, நமது மகிழ்வுக்கு அடித்தளம் என்று எடுத்துரைத்தார்.
பேறுகால வேதனையில் உள்ள பெண்ணை இயேசு ஓர் எடுத்துக்காட்டாக சீடர்களுக்குக் கூறியதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை பிறப்பின்போது, தாய் அடையும் வேதனை, மகிழ்வாக மாறுவதுபோல், நமது வேதனைகளையும் இறைவன் மகிழ்வாக மாற்றுவார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மேலும், "ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் பணியிடங்களில், தன் வார்த்தைகள் வழியாக மட்டுமல்லாமல், தன் நேரிய வாழ்வினால் கடவுளின் சாட்சிகளாக வாழ முடியும்" என்ற வார்த்தைகளுடன் கூடிய Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.