2014-05-30 16:29:11

ஜூன் 8ம் தேதி, பாலஸ்தீனா அரசுத் தலைவரும், இஸ்ரேல் அரசுத் தலைவரும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர்


மே,30,2014. வருகிற ஜூன் 8ம் தேதி, ஞாயிறன்று, பாலஸ்தீனா அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களும், இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர் என்று திருப்பீடச் சேதித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், Federico Lombardi அவர்கள் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட புனித பூமி பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, அவர், பாலஸ்தீனா, இஸ்ரேல் நாடுகளின் அரசுத் தலைவர்களை வத்திக்கானில் உள்ள தன் இல்லத்திற்கு வருகைதந்து தன்னோடு இணைந்து, அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, இரு அரசுத் தலைவர்களும் ஜூன் மாதம் 8ம் தேதியை ஒரு சேர தெரிவு செய்திருப்பது, இந்த சமாதான முயற்சியின் முதல் வெற்றி என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
திருத்தந்தையின் புனித பூமி திருப்பயணத்தில் அவருடன் பயணித்த சமூகத் தொடர்பு குழுவின் தலைவர், இயேசு சபை அருள் பணியாளர் David Neuhaus அவர்கள், ஜூன் 8ம் தேதி நிகழ்வைப் பற்றி பேசியபோது, இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுவரை செபத்தின் வழியாக இந்த முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை என்றும், இந்த முயற்சியைத் துவக்கி வைக்க திருத்தந்தை முயன்றிருப்பது, அவர் ஓர் ஆன்மீகத் தலைவர் என்பதை இவ்வுலகிற்கு மீண்டும் எடுத்துரைக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
உலகின் பல மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்த 'பெந்தகோஸ்து' திருவிழா, அதாவது, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை, ஜூன் 8ம் தேதி, ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.