2014-05-29 16:33:18

திருத்தந்தை, யூத இராபியையும், இஸ்லாமிய அறிஞரையும், அரவணைத்து நின்றது, மத நல்லுறவின் சிகரமாக அமைந்தது


மே,29,2014. "இயேசுவுடன் உண்மையான நட்பில் இணைவோமாக; இவ்வாறு, அவரை நெருங்கிப் பின்பற்றி, அவரோடு, அவருக்காக வாழ்வோமாக" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.
இத்தாலியம், ஆங்கிலம், அரேபியம் உட்பட ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் திருத்தந்தை விடுத்துவரும் Twitter செய்திகள் பல கோடி மக்களை சென்றடைகிறது.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொண்ட மூன்று நாள் திருப்பயணத்தில், சிரியாவின் அகதிகளைச் சந்தித்தது, பிரிவுச் சுவரில் தலைசாய்த்து செபித்தது, யூதர்களின் தகனம் என்ற கொடுமையை அனுபவித்த ஒருவரின் கரங்களை முத்தமிட்டது ஆகிய நிகழ்வுகள் ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன.
அர்ஜென்டீனா நாட்டிலிருந்து வத்திகானுக்கு வந்து, பின்னர் திருத்தந்தையின் பயணத்தில் அவருடன் சென்ற இரு சிறந்த நண்பர்கள், யூத இராபி Abraham Skorka அவர்களையும், இஸ்லாமிய அறிஞர், Sheikh Omar Abboud அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வடச்சுவர் அருகே அரவணைத்து நின்றது, மத நல்லுறவின் சிகரமாக அமைந்ததென்று ஊடகங்கள் கூறி வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.