2014-05-29 16:37:43

கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள் சிரியாவில் ஆற்றிவரும் பணிகளைக் குறித்த ஆலோசனை கூட்டம்


மே,29,2014. திருத்தந்தையின் சார்பில் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் 'Cor Unum' அவை, மே 30, இவ்வேள்ளியன்று வத்திக்கானில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
சிரியாவில் தொடர்ந்து வரும் நெருக்கடி நிலையில், 'Cor Unum' அவையும் ஏனைய 25 கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களும் இணைந்து ஆற்றிவரும் பணிகளைக் குறித்த ஓர் ஆலோசனை கூட்டமாக இது நடைபெறுகிறது.
'Cor Unum' அவையின் தலைவர் கர்தினால் Robert Sara, திருப்பீடச் செயலர் கர்தினால் Pietro Parolin, சிரியாவின் திருப்பீடத் தூதர், பேராயர் Mario Zenari, மற்றும் சிரியாவில் பணியாற்றும் காரித்தாஸ் அமைப்பின் தலைவர், ஆயர் Antoine Audo ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
சிரியாவின் நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை மறுபரிசீலனை செய்வதும், தொடர்ந்து வரும் காலத்தில் பல்வேறு அமைப்புக்களின் இடையே நிலவ வேண்டிய ஒருங்கிணைந்த செயல்பாடுகளைத் திட்டமிடுவதும் இக்கூட்டத்தின் முக்கியப் பணிகளாகும் என்று 'Cor Unum' அவை அறிவித்துள்ளது.
சிரியாவின் உள்நாட்டுப் போரினால் இதுவரை, 1,60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மேலும், உள்நாட்டில் 60 இலட்சம் மக்களும், வெளிநாடுகளுக்கு 20 இலட்சம் மக்களும் புலம் பெயர்ந்துள்ளனர் என்று 'Cor Unum' அவையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.