2014-05-28 16:15:49

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


மே 28,2014. கடந்த வார இறுதியில் தான் மேற்கொண்ட, புனித பூமியின் ஜோர்டன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேல் நாடுகளில் மூன்று நாள் திருப்பயணத்தை நிறைவுச் செய்து திங்கள் இரவு வத்திக்கான் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த நாள் காலையே உரோம் நகரின் புனித மேரி மேஜர் மரியன்னை திருத்தலத்திற்குச் சென்று மலர்களைக் காணிக்கையாக வைத்து அன்னைக்கு தன் நன்றியை வெளிப்படுத்தியபின், இப்புதன் காலை தூய பேதுரு வளாகத்தில் தன் வழக்கமான பொதுமறையுரையை வழங்க மக்களைச் சந்தித்தார். தான் அண்மையில் நிறைவுச் செய்த புனித பூமி திருப்பயணம் குறித்து மக்களுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதர சகோதரிகளே, இந்நாட்களில் புனித பூமியில் இடம்பெற்ற என் அப்போஸ்தலிக்கத் திருப்பயணம், எனக்கும், திருஅவை முழுவதற்கும் ஒரு பெரும்கொடையாக இருந்தது. இத்திருப்பயணம், திருத்தந்தை ஆறாம் பால் அவர்களுக்கும், Ecumenical கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை Athenagoras அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திப்பின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாக அமைந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தச் சந்திப்பு, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில் ஒரு மைல் கல்லைப் பதிப்பதாக இருந்தது. Ecumenical கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தை பர்தலோமேயோவும் நானும், உயிர்த்த இயேசு கல்லறையின் மீது சகோதரர்களாக ஒன்றிணைந்து செபித்ததுடன், இவ்விரு கிறிஸ்தவ சபைகளும் முழு ஒன்றிப்பைப் பெறுவதற்காக உழைப்போம் என்ற அர்ப்பணத்தையும் புதுப்பித்தோம். மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதிக்காக உழைப்போரின் முயற்சிகளுக்கும், வன்முறை மற்றும் போரின் விளைவுகளால் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கும், குறிப்பாக அகதிகள் மற்றும் குழந்தைகளுக்கு அக்கறையுடன் பணியாற்றி வருவோருக்கும் என் ஊக்கத்தை வழங்குவதாகவும் இத்திருப்பயணத்தின் நோக்கம் இருந்தது. அமைதிக்காக என்னுடன் ஒன்றிணைந்து செபிக்க வருமாறு நான், இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீன அரசுத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். இறுதியாக, நான் புனித பூமியின் கிறிஸ்தவர்களை அவர்களின் விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், அவர்களின் துன்பங்களை அவர்களோடு இணைந்து ஏற்கவும், கிறிஸ்தவ சமுதாயத்தின் பிறரன்பு மற்றும் கல்விப்பணிகளுக்கு ஆதரவளிக்கவும் அங்குச் சென்றேன். அகில உலகத் திருஅவையின் செபமும் ஒருமைப்பாடும் மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வை, ஒப்புரவு மற்றும் நம்பிக்கையெனும் நற்செய்தியின் சாட்சியத்தை, உரமூட்டி வளர்ப்பதுடன், இறைவனின் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பூமிக்கு அமைதி எனும் இறைவனின் கொடையைக் கொணர உதவுவதாக.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.