2014-05-28 15:43:26

திருத்தந்தை மேற்கொண்ட புனித பூமி திருப்பயணத்தின் முழு தாக்கத்தையும் உணர நமக்கு நேரம் தேவைப்படுகிறது - அருள்பணி Lombardi


மே,28,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணம், மிகக் குறுகிய காலத்தில், அதிக அளவு நிகழ்வுகளையும், சந்திப்புக்களையும் கொண்டிருந்ததால், இப்பயணத்தின் முழு தாக்கத்தையும் உணர நமக்கு நேரம் தேவைப்படுகிறது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி Federico Lombardi அவர்கள் கூறினார்.
புனித பூமி பயணம், மற்றும், பயணத்தின் இறுதியில், விமானத்தில், செய்தியாளர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட நேர்காணல் ஆகியவற்றைக் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இயேசு சபை அருள்பணி Lombardi அவர்கள் இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை பர்தலோமேயோ அவர்களைச் சந்திப்பது, இப்பயணத்தின் மிக முக்கிய நோக்கம் என்றாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதர்கள், இஸ்லாமியர் அனைவரோடும் மேற்கொண்ட சந்திப்புக்கள் இன்னும் பல நேர்மறையான அலைகளை உருவாகியுள்ளது என்பது நிச்சயம் என்று அருள்பணி Lombardi எடுத்துரைத்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க எருசலேம் நகரம், ஆன்மீக அளவில் உலக மக்களுக்குச் சொந்தமான நகரம் என்பதை எடுத்துரைக்க திருத்தந்தை தயங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Lombardi அவர்கள், இந்நகரை அரசியல் காரணங்களுக்காகப் பிரித்துள்ளதை, உரையாடல்கள் வழியே தீர்க்கவேண்டும் என்பதையும் திருத்தந்தை கூறியது ஒரு முக்கியச் செய்தி என்று கூறினார்.
பிரேசில் நாட்டிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திரும்பியபோது, பத்திரிகையாளர்களிடம், திறந்த உள்ளத்துடன் மேற்கொண்ட உரையாடலைப் போலவே, இத்தருணத்திலும் அவர் ஒளிவு மறைவு இன்றி பத்திரிகையாளர்களுக்குப் பதில் அளித்தது, பலரை வியப்படைய வைத்துள்ளது என்பதையும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி Lombardi தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.