2014-05-28 15:40:44

திருத்தந்தை பிரான்சிஸ் ILOவுக்கு அனுப்பியுள்ள செய்தி - மனித உழைப்பை நாம் ஒரு கொடையாகவும், கடமையாகவும் கருதவேண்டும்


மே,28,2014. படைப்பாற்றல் மிகுந்த இறைவனின் பணியை இவ்வுலகில் தொடர்வது மனிதர்களின் உழைப்பு; எனவே, மனித உழைப்பை நாம் ஒரு கொடையாகவும், கடமையாகவும் கருதவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மே 28, இப்புதன் முதல், ஜூன் 12ம் தேதி முடிய ILO என்றழைக்கப்படும் பன்னாட்டுத் தொழில் நிறுவனம் ஜெனீவாவில் மேற்கொண்டுள்ள 103வது ஆண்டுக் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
ILOவின் தலைமை இயக்குனர், Guy Ryder அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனித உழைப்பின் மாண்பை இவ்வுலகிற்கு உறுதியுடன் அறிவித்து வரும் ILOவின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளார்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் இவ்வுலகில், இளையோர், விரைவில் மனம் தளர்ந்து, தங்கள் திறமைகளில் நம்பிக்கை குறைந்து போவதைத் தடுக்கும் வழிகளை, ILO நிறுவனமும், ஏனைய உலக நிறுவனங்களும் ஆய்வு செய்யவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
மக்கள் பெருமளவில் நாடுவிட்டு நாடு செல்லும் கட்டாயம் அதிகரித்து வருவது நாம் எதிர்கொள்ளவேண்டிய மற்றொரு முக்கியப் பிரச்சனை என்பதைக் கூறியத் திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு நாட்டிலும் அநீதமான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது நம் அவசரத் தேவை என்று கூறினார்.
மனித மாண்பையும், மனித உழைப்பின் மாண்பையும் தன் சமுதாயப் படிப்பினைகள் வழியே வலியுறுத்திவரும் கத்தோலிக்கத் திருஅவை, மனித உழைப்பை மேம்படுத்தும் பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் உறுதி கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.