2014-05-28 15:47:28

தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கோவாவில் உருவாக்கப்பட்டுள்ள “God Saves Life-line” அமைப்பு


மே,28,2014. உயிரை வழங்கும் இறைவன் ஒருவருக்கே உயிரை மீண்டும் எடுத்துக்கொள்ளும் உரிமையும் உள்ளது என்று கோவா, தாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Filipe Neri Sebastião do Rosário Ferrão அவர்கள் கூறினார்.
தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கோவாவில் உருவாக்கப்பட்டுள்ள “God Saves Life-line” அமைப்பினை அண்மையில் துவக்கிவைத்த பேராயர் Rosário Ferrão அவர்கள் இவ்வாறு கூறினார்.
கோவாவில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கு, 15.8 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும், இது தேசிய அளவான 11.4 என்பதை விட அதிகம் என்றும் நாட்டின் குற்றப் புலனாய்வு துறை அறிவித்துள்ளது.
கோவாவில் மிகப் புகழ்பெற்ற Bom Jesus பசிலிக்காவிற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள “God Saves Life-line” அமைப்பின் வழியாக, பலருக்கு, குறிப்பாக, இளையோருக்கு மனவியல் வழிகளில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வழிகள் சொல்லித் தரப்படும் என்று இவ்வமைப்பை உருவாக்கிய அருள்பணி Mario Saturnino Dias அவர்கள் கூறினார்.
இந்தியாவில் நிகழும் பல தற்கொலைகள் வெளிப்படுத்தப்படாமல் போகின்றன என்பதால், அரசு கூறும் எண்ணிக்கையை விட, உண்மையான தற்கொலை எண்ணிக்கை இன்னும் அதிகம் என்பதும், இவற்றில் பெரும்பாலானோர் இளையோர் என்பதும் சங்கடம் தரும் உண்மை என்று அருள்பணி Dias அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.