2014-05-27 16:57:19

திருத்தந்தை பிரான்சிஸ், 'மேலறை'யில் ஆற்றியத் திருப்பலியில் வழங்கிய மறையுரை


மே,27,2014. இந்த மேலறையில் திருப்பலியாற்ற இறைவன் நம்மை அழைத்து வந்தது, மாபெரும் ஒரு கொடை. கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க முதுபெரும் தந்தையர், இந்தப் பயணம் முழுவதும் என்னுடன் பயணித்ததற்கு, சிறப்பான நன்றி.
இந்த மேலறையில்தான் இயேசு இறுதி இரவுணவைப் பகிர்ந்தார்; இங்குதான் உயிர்ப்புக்குப் பின், மீண்டும் தோன்றினார்; இங்குதான் தூய ஆவியார், மரியாவின்மீதும், சீடர்கள் மீதும் இறங்கி வந்து, திருஅவையைப் பிறக்கச் செய்தார்.
இந்த மேலறை, பணியை நினைவுபடுத்துகிறது. சீடர்களின் காலடிகளைக் கழுவி, இயேசு நமக்குப் பணிவானப் பணியைச் சொல்லித்தந்தார். வறியோர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோருக்கு நமது பணி உரித்தானது என்பதைச் சொல்லித்தந்தார்.
இந்த மேலறை நட்பை நினைவுபடுத்துகிறது. பணியாளர் என்றல்ல, நண்பர்கள் என்று (யோவான் 15:15) தன் சீடர்களை அழைத்த இயேசு, நம்மை, குறிப்பாக, அருள்பணியாளர்களை, தன் நண்பர்களாக்குகின்றார்.
இந்த மேலறை, நம்மிடம் உள்ள குறைகளையும் நினைவுபடுத்துகிறது. இயேசுவைக் காட்டிக் கொடுத்தவர், மேலறையில் இருந்தார். நாமும், நம் சகோதர சகோதரிகளைத் தீர்ப்பிடும்போது, புறக்கணிக்கும்போது இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம்.
இந்த மேலறை, பகிர்வை, உடன்பிறந்த உணர்வை, அமைதியை, நினைவுபடுத்துகிறது. இந்த மேலறையிலிருந்து, அன்பும், நன்மைத் தனமும், எவ்வளவு அதிகமாக, பெருக்கெடுத்து ஓடியது! இந்த அன்பு, இன்றும் திருஅவையில் பெருவெள்ளமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
இறுதியாக, இந்த மேலறை, திருஅவை என்ற புதியக் குடும்பம் பிறந்ததை நினைவுபடுத்துகிறது. இறைவனின் குழந்தைகள் அனைவரும், இக்குடும்பத்தின் உறுப்பினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
இங்கிருந்து திருஅவை புறப்பட்டுச் செல்கிறது. தூய ஆவியாரின் உயிரூட்டும் ஆவியைச் சுமந்து புறப்பட்டுச் செல்கிறது.
உமது ஆவியாரை அனுப்பும், இறைவா, உலகின் முகத்தைப் புதுப்பித்தருளும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.