2014-05-27 16:55:57

திருத்தந்தை, யூத மத இராபிகளுக்கு வழங்கிய உரை


மே,27,2014. மதிப்பிற்குரிய யூத இராபிகளே, உங்கள் மத்தியில் இருப்பதில் எனக்குப் பெரு மகிழ்வு. Buenos Airesல் நான் பேராயராகப் பணியாற்றிய காலத்திலிருந்து, என் நண்பர்களில் பலர், யூதர்கள். நாங்கள் இணைந்து பல அழகிய உரையாடல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கத்தோலிக்கத் திருஅவையில், எனக்கு முந்தையத் திருத்தந்தையர், யூத சமுதாயத்துடன் மேற்கொண்ட உரையாடல்கள் என் தலைமைப்பொறுப்பு காலத்திலும் தொடர்கிறது.
நம்மிடையே நிலவும் நட்பு, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒரு முக்கிய விளைவு. அச்சங்கத்தில் வெளியிடப்பட்ட "Nostra Aetate" என்ற ஏட்டின் 50ம் ஆண்டைக் கொண்டாடுகிறோம்.
நம்மிடையே வளர்ந்துவரும் நட்புறவு இறைவன் அளித்த மாபெரும் கொடை எனினும், இதற்காக உழைத்த யூத, கிறிஸ்தவப் பெரியோரை நாம் மறக்கக் கூடாது.
2002ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் புனித பூமிக்கு வந்தபோது, இஸ்ரேல் நாட்டின் யூத இராபிகளுடன் மேற்கொண்ட முயற்சிகளை இப்போது நினைவுகூருகிறேன்.
நம் உறவை வலுப்படுத்த நாம் இன்னும் பல முயற்சிகள் மேற்கொள்வது அவசியம். யூத பாரம்பரியத்தில் வேர்களைக் கொண்ட கிறிஸ்தவம், தன் வேர்களை மறக்கவில்லை.
யூதமும், கிறிஸ்தவமும் இணைந்து, உண்மையான அமைதியை இவ்வுலகில் வளர்க்க முடியும். யூத எதிர்ப்பு என்ற தவறானப் போக்கையும், இன்னும் உலகில் நிலவும் பல்வேறு பாகுபாட்டுக் கொள்கைகளையும் நீக்க நாம் இணைந்து முயலவேண்டும்.
இம்முயற்சிகளில் இறைவன் நம்மை வழிநடத்துவாராக! Shalom!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.