2014-05-27 16:56:45

கெத்சமனியில் அருட்பணியாளர்கள், துறவியரோடு திருத்தந்தையின் சந்திப்பும் பயண நிறைவும்


மே,27,2014. கெத்சமனியில் இயேசு, கைது செய்யப்படுவதற்கு முன், செபித்த பாறையில் கட்டப்பட்டுள்ள கோவிலுக்குச் சென்றார் திருத்தந்தை. அந்தப் பாறையின் மீதே இக்கோவிலின் பலிப்பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், அருள்பணியாளர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோர் அனைவரையும் சந்தித்து உரையாற்றினார்.
இச்சந்திப்பிற்குப்பின், தன் புனித பூமி திருப்பயணத் திட்டத்தின் இறுதி நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேமில், இயேசு தன் இறுதி இரவு உணவை அருந்திய, 'மேலறை' என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள கோவிலுக்குச் சென்றார். இவ்விடத்தில், உள்ளூர் நேரம், மாலை 5.30 மணிக்கு, புனித பூமியின் திருஅவை பொறுப்பாளர்கள் அனைவரோடும் இணைந்து திருப்பலியாற்றியத் திருத்தந்தை, தன் பயணத்தின் இறுதி மறையுரையை வழங்கினார்.
இத்திருப்பலிக்குப்பின், அங்கிருந்து, Tel Aviv வந்து, அங்கு உள்ளூர் நேரம், இரவு 8.15 மணிக்கு, அதாவது, இந்திய நேரம், இரவு 10.45 மணிக்கு, இஸ்ரேல் அரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரிடமும் விடைபெற்று, உரோம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். 2250 கி.மீ. தூரத்தை, 3 மணி, 45 நிமிடங்கள் பயணித்து, உரோம் நேரம் இரவு 11 மணிக்கு Ciampino விமானதளத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.