2014-05-27 16:55:46

இஸ்ராயேல் அரசுத்தலைவர், பிரதமர், யூத தலைமைக் குருக்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


மே,27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தின் இறுதி நாளான திங்களன்று காலை உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் நண்பகல் 12.30 மணிக்கு, Yad Vashem நினைவில்லம் சென்றார்.
2ம் உலகப் போரின்போது, நாத்சி வதை முகாம்களில் இறந்த மக்கள் சிலரின் எஞ்சிய உடல்பகுதிகள் அடங்கிய கலசங்களும், கல்லறைகளும் இந்த நினைவு இடத்தில் உள்ளன. நாத்சி கொடுமைகளுக்கு, 60 இலட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் உயிரிழந்துள்ளதன் நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவகத்தில் திருத்தந்தையை வரவேற்க இஸ்ரேல் அரசுத் தலைவரும், பிரதமரும் காத்திருந்தனர்.
இந்த நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திருத்தந்தை. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து வாசகம் ஒன்று வாசிக்கபட்டபின், அந்த நிர்வாகத்தின் இயக்குனர் திருத்தந்தையை வரவேற்றுப் பேச, திருத்தந்தையும் அங்கு தன் உரையை வழங்கினார்.
இச்சந்திப்பிற்குப் பின், Hechal Shlomo மையம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு யூத மதத்தின் இரு முக்கிய தலைமைக் குருக்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, இரு தரப்பினரிடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டபின், இரு தலைமைக் குருக்களும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். பதிலுக்கு, திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.
ஏறத்தாழ உள்ளூர் நேரம் 11.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம், பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பை நிறைவு செய்தத் திருத்தந்தை, அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு, மாளிகைக்கு வெளியே காத்திருந்து, திருத்தந்தையை வரவேற்ற அரசுத் தலைவர் Shimon Peres அவர்களிடம், "அரசுத் தலைவரே, உங்கள் வாழ்த்துக்கும், வரவேற்பிற்கும் நன்றி. சிறிது கற்பனையோடு நான் இன்று ஒரு புதிய 'பேறுபெற்றோர்' மொழியை உருவாக்கி, அதை எனக்கு நானே கூறிக் கொள்கிறேன்: 'அறிவும் நற்குணமும் கொண்ட ஒருவரின் இல்லத்தில் நுழைவோர் பேறுபெற்றோர்'. நான் பேறு பெற்றவனாக இப்போது உணர்கிறேன். மனதார உங்களுக்கு நன்றி சொல்கிறேன்." என்று கூறி, அரசுத் தலைவரை மகிழ்வில் நிறைத்தார், திருத்தந்தை.
இதன்பின், மாளிகையினுள் சென்ற இரு தலைவர்களும், நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர். விருந்தினர்களுக்கென வைக்கப்பட்டிருந்த தங்கப் புத்தகத்தில் திருத்தந்தை கையொப்பம் இட்டார். ஒரு சில நிமிடங்கள் தனித்து உரையாடியபின், அரசுத் தலைவர், திருத்தந்தையை மாளிகைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒலிவ மரம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நட்டார். பின்னர் அங்கு கூடியிருந்தோர் முன், முதலில் அரசுத் தலைவர் உரை வழங்க, அதைத் தொடர்ந்து, திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.
அரசுத் தலைவர் இல்லத்தின் நிகழ்வுகளை முடித்தபின், அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள 'எருசலேமின் நமதன்னை' மையத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காரில் சென்றார். திருப்பயணிகளுக்குத் தங்குமிடமாகவும், ஆன்மீக இல்லமாகவும் செயல்பட்டு வரும் இம்மையத்தைக் காணவந்த திருத்தந்தையை, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu அங்கு சந்தித்தார்.
அம்மையத்தில் மதிய உணவு அருந்தியத் திருத்தந்தை, ஒலிவ மலையிலுள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆலயம் நோக்கிப் பயணமானார். அங்கு, Ecumenical சபை முதுபெரும் தந்தையை, திருத்தந்தை மீண்டும் ஒருமுறை சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.