2014-05-26 17:58:02

பாலஸ்தீனத்தில் திருத்தந்தையின் பயணத்திட்ட நிறைவு


மே,26,2014. ஞாயிறு காலையை பாலஸ்தீனத்தில் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையை இஸ்ராயேலில் செலவிட்டார். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருந்தாலும், பல ஆண்டுகளாக பகைமை உணர்வுகளுடன் தொடர்ந்துவரும் நாடுகள்.
ஞாயிறு மதிய உணவிற்குப்பின், பெத்லகேமின் இயேசு பிறப்பு பசிலிக்காவைத் தரிசித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் இயேசு பிறந்த புனித தலத்தையும் தரிசித்தபின் அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெத்லகேமின் ஃபீனிக்ஸ் மையத்திற்குச் சென்றார் திருத்தந்தை.
இந்த மையம், புலம்பெயர்ந்தோர் குழந்தைகளுக்கென, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் வழங்கிய நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது. அங்கு சிறாரோடு இணைந்து அவர்களுக்காக செபித்த திருத்தந்தை, சிறிது நேரம் அவர்களோடு உரையாடவும் செய்தார். ஒரு சிறுவனும் சிறுமியும் முன்வந்து, தாங்கள் வரைந்த படம், எழுதிய சில வரிகள், தங்கள் கைவேலைப்பாடுகளால் செய்தவை ஆகியவைகளை திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினர். இதுவே பாலஸ்தீனத்தில் அவர் இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சியாகும்.
அங்கிருந்து பெத்லகேமின் ஹெலிகாப்டர் தளம் சென்று பாலஸ்தீன அதிகாரிகளிடமிருந்து விடைபெற்று இஸ்ராயேல் நோக்கி பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.