2014-05-26 17:54:42

திருத்தந்தையின் திங்கள் காலை பயண நிகழ்வுகள்


மே,26,2014. மே 26, திங்கள் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் நிகழ்வு, எருசலேமின் இஸ்லாம் மசூதியில் நிகழ்ந்த ஒரு சந்திப்புடன் துவங்கியது. உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு, மசூதியை அடைந்த திருத்தந்தையை, அங்குள்ள தலைமைக் குரு வரவேற்று மசூதியைச் சுற்றிக் காட்டினார். பின்னர், அங்கிருந்த ஓர் அரங்கத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மசூதியின் தலைமைக் குருவும், இஸ்லாமிய உயர்மட்ட அவையின் தலைவரும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசியபின், திருத்தந்தை அவர்களுக்கு தன் உரையை வழங்கினார்.
இச்சந்திப்பிற்குப் பின்னர், எருசலேமின் மேற்குச் சுவர் நோக்கி, அதாவது, 1 கிலோமீட்டர் தூரம், காரில் பயணம் செய்தார் திருத்தந்தை. உலகப் புகழ்பெற்ற இந்த சுவருக்கு அருகே, யூத மதத் தலைமைக்குரு, திருத்தந்தையை வரவேற்றார். அந்தப் புனிதத் தலத்தில், அந்தச் சுவர் அருகே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதியாகச் செபித்தார். இந்தச் சுவர் அருகே, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் அமைதியாகச் செபித்தது குறிப்பிடத் தக்கது.
பின்னர், அங்கிருந்து Monte Herzl எனுமிடத்திற்கு திருத்தந்தை சென்றார். இஸ்ரேல் நாட்டின் தேசியக் கல்லறையான இவ்விடத்திற்கு, இஸ்ரேல் நாட்டு அரசுத் தலைவரும், பிரதமரும் வந்திருந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கல்லறையில் மலர் வளையம் ஒன்றை வைத்தபின், அங்கிருந்து புறப்பட்டு, Yad Vashem என்ற நினைவிடம் நோக்கிச் சென்றார். இந்த நினைவிடத்திலும், அதைத் தொடர்ந்தும் நிகழந்தனவற்றை நாளை மே,27, காண்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.