2014-05-26 17:17:21

திருத்தந்தை பிரான்சிஸ், புனிதக் கல்லறை பசிலிக்காவில் வழங்கிய உரை


மே,26,2014. அனைத்து கிறிஸ்தவர்களும் ஆழ்ந்த வணக்கத்துடன் வந்து சேரும் இந்த பசிலிக்காவில், முதுபெரும் தந்தை பார்த்தலோமியோ அவர்களுடன், என் புனித பூமி திருப்பயணம் சிகரத்தை அடைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், என் முன்னோர், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், முதுபெரும் தந்தை, அத்தனகோரஸ் அவர்களும் புனித நகரான எருசலேமில் சந்தித்ததைத் தொடர்ந்து, நாங்கள், அவ்விருவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம்.
நாம் இங்கு கூடியிருப்பது, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மிகப் பெரும் வரம். காலியான கல்லறையிலிருந்துதான் உயிர்ப்பின் பறைசாற்றுதல் துவங்கியது. இதுவே நம் நம்பிக்கையின் அடித்தளம்.
காலியான கல்லறை முன்பு, பணிவான அமைதியுடன் நாம் நிற்கிறோம். நாம் அனைவரும், ஆண், பெண் அனைவரும், உயிர்ப்பின் மக்கள், சாவின் மக்கள் அல்ல என்பதே, நமக்கு அளிக்கப்பட்டுள்ள இறை அழைப்பு என்பதை, இக்கல்லறை முன்பு உணர்கிறோம்.
இந்த அடிப்படை நம்பிக்கையை நம் உள்ளங்களிலிருந்து பறித்துவிட அனுமதிக்கக் கூடாது. இந்த நம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றும் பணியிலிருந்து நாம் விலகி ஓடக்கூடாது. உயிர்ப்பின் மகிழ்வு நம்மை ஒன்றிணைக்கும் அழைப்பாக ஒலிப்பதை கேட்கும் திறனற்றவர்களாக மாறக்கூடாது.

நம்மிடையே பிரிவுகள் உள்ளன என்பதை மறுக்கமுடியாது. இப்புனிதத் தலத்தில், நம் பிரிவுகள் இன்னும் ஆழமான வேதனையைத் தருகின்றன. இப்பிரிவுகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியை, இரு பெரும் தந்தையர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்டனர். தற்போது, மீண்டும் தூய ஆவியாரின் தூண்டுதலால், நம்மை ஒற்றுமைப்படுத்தும் மற்றொரு முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
ஒரே திருப்பலி பீடத்தில் இறைவனின் உடலைப் பகிர்ந்துகொள்வதற்கு, நாம் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும் என்பதை உணர்கிறோம். இந்த ஒற்றுமை முயற்சி, நம்மை அச்சுறுத்தி, செயலிழக்கச் செய்கிறது. இருப்பினும், உயிர்ப்பின்போது, கல்லறையை மூடியிருந்த பெருங்கல் அகன்றதுபோல, நாம் ஒரே திருப்பலி பீடத்தில் பங்கு கொள்வதற்குத் தடையாய் உள்ள அனைத்தும் விலகும் என்று நம்புவோம்.
ஒவ்வொரு முறையும் நம் தவறுகளை எடுத்துரைத்து, கிறிஸ்தவ சகோதரர்களிடம் மன்னிப்புப் பெறும்போதும், வழங்கும்போதும், உயிர்ப்பை உணர்கிறோம்!
நம்மிடம் உள்ள முற்சார்பு எண்ணங்களைப் புறந்தள்ளி, உடன்பிறந்த உணர்வை வளர்க்கத் துணியும்போது, உயிர்ப்பை உணர்கிறோம்!
உயிர்ப்பு தரும் நம்பிக்கையுடன் நம் உரையாடல்களைத் தொடர்வோம்.
இப்புனிதத் தலங்களில் திருப்பயணிகளாக நிற்கும் நாம், மத்தியக் கிழக்குப் பகுதியிலும், உலகின் பல நாடுகளிலும் அமைதியிழந்து தவிக்கும் மக்களை நினைவுகூர்ந்து செபிக்கிறோம்.
பல்வேறு சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வன்முறைகளால் பாதிக்கப்படும்போது, துன்பத்தில் ஒன்றிப்பு உருவாகிறது. வன்முறைகளுக்கு உள்ளாகும் அனைத்து கிறிஸ்தவர்களுக்காகவும் நாம் இறைவனிடம் வேண்டுகிறோம்.
என் சகோதரரான முதுபெரும் தந்தையே, அன்பு சகோதர, சகோதரிகளே, பழங்காலத்திலிருந்து நாம் திரட்டி வந்துள்ள வேற்றுமை உணர்வுகளைக் களைந்து, அன்பின் ஊற்றான தூய ஆவியார் நம் உள்ளத்தில் தூண்டும் உணர்வுகளுக்குச் செவிமடுப்போம்.
"அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால்... உலகம் நம்பும்" (யோவான் 17:21) என்று இயேசு தன் சீடர்களுக்காக எழுப்பியச் செபத்தை, நாமும் பணிவோடு நமது செபமாக்குவோம்.
ஒற்றுமை முயற்சிகளில் மனம் தளரும்போது, இறைவனின் தாய் நம்மைப் பாதுகாப்பாராக! அவரது அரவணைப்பில், நமது ஒற்றுமைப் பயணம் தொடர்வதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.