2014-05-26 17:56:09

இஸ்ராயேலில் திருத்தந்தையின் திருப்பயண நிகழ்வுகள் துவக்கம்


மே,26,2014. பெத்லகேமிலிருந்து ஹெலிகாப்டரில் 65 கிலோமீட்டர்கள் பயணம் செய்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ராயேலின் டெல் அவிவை வந்தடைந்தபோது, அங்கு இஸ்ராயேலின் அரசுத்தலைவரும், பிரதமரும் திருத்தந்தையை வரவேற்க காத்திருந்தனர். அரசுத் தலைவர் Shimon Peres அவர்களும், பிரதமர் Benjamin Netanyahu அவர்களும், திருத்தந்தையை முதலில் வரவேற்றுப் பேசினர். திருத்தந்தையும் தன் முதல் உரையை அளித்தார். அங்கிருந்து நேரடியாக Ecumenical கிறிஸ்தவசபை முதுபெரும் தந்தை பர்த்தலோமியோவை சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இரு தலைவர்களுக்கும் இடையே பரிசுப்பொருட்கள் பரிமாறப்பட்டபின், தனியாக சிறிதுநேரம் உரையாடவும் செய்தனர். அதன்பின் இரு கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையேயான பொதுஅறிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
ஞாயிறு மாலை உள்ளூர் நேரம் 7 மணியளவில், இந்திய நேரம் இரவு 9மணி 30 நிமிடங்களுக்கு திருத்தந்தையுடன் இணைந்து Ecumenical முதுபெரும் தந்தையும் கலந்துகொண்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாடு இயேசுவின் கல்லறை இருக்கும் இடத்தில் இடம்பெற்றது. அங்கு Ecumenical முதுபெரும் தந்தை முதலில் உரைவழங்க, திருத்தந்தையும் தன் உரையை அளித்தார். இவ்வழிபாட்டிற்குப்பின் எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தந்தை இல்லம் சென்ற திருத்ததை பிரான்சிஸ் அவர்கள், அங்கு ஆயர்களோடு இணைந்து இரவு உணவை அருந்தினார். இத்துடன் அவரின் ஞாயிறு தின நிகழ்வுகள் நிறைவுக்குவந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.