2014-05-25 15:28:00

புனிதபூமியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் நாள் மாலை திருப்பயண விளக்கம்


புனிதபூமிக்கான தன் திருப்பயணத்தின் முதல் நாளில் ஜோர்தான் தலைநகர் அமானில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றியபின், அங்கிருந்து 50கிலோமீட்டர் தொலைவிலுள்ள முக்கிய புனித இடம் ஒன்றை காணச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆம், திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற இடம் அது. ஜோர்டன் மன்னர் அப்துல்லா, அரசி இரானியா ஆகியோருடன் ஜோர்டான் ஆற்றங்கரைக்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்கு சிறிது நேரம் அமைதியாகச் செபித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் ஓரிரு வார்த்தைகளை எழுதி கையெழுத்தும் இட்டார். அந்த ஆற்றோரம், கட்டப்பட்டுவரும் கோவிலில் திருத்தந்தையைச் சந்திக்க அகதி மக்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏறத்தாழ 600பேர் கூடியிருந்தனர்.
இயேசு திருமுழுக்குப்பெற்ற இடத்தைத் தரிசித்தப்பின் கோவிலுனுள் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை ஃபாவூத் துவால் வரவேற்றுப் பேசியபின், அங்கிருந்தோருள் சிலர் முன் வந்து தங்கள் விசுவாச சாட்சியங்களை அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைத்தனர். சிறார்கள் ஒன்றிணைந்து அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் 'அமைதியின் கருவியாய் என்னையே மாற்றியருளும்' என்ற பாடலை பாடியது இனிமையிலும் இனிமையாக இருந்தது. திருத்தந்தையுடனான இச்சந்திப்பின்போது சாட்சியம் வழங்குகியவருள் ஒருவரான 11 வயது சிறுமி, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இயேசுவின் மீதான விசுவாசத்தின் துணைகொண்டு வாழ்வில் துணிச்சலுடன் நடைபோட்டு வருவதாக உருக்கமாக எடுத்துரைத்தார். சாட்சிய உரைகளின் இறுதியில் தன் கருத்துக்களையும் அங்கு குழுமியிருந்தோருடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். உரைக்குப்பின், அங்கு குழுமியிருந்த அகதிகள் மற்றும் மாற்றுத் திறணாளிகளோடு செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். அனைவரிடமும் விடைபெற்றபின், அங்கிருந்து 48 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள அமான் திருப்பீடத் தூதரகத்தை வந்தடைந்து அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இத்துடன் அவரின் முதல் நாள் பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.