2014-05-25 15:27:38

பாலஸ்தீன நாட்டில், திருத்தந்தையின் ஞாயிறு காலை நிகழ்வுகள்


மே,25,2014. ஞாயிறு காலை, உள்ளூர் நேரம், 7.30 மணிக்கெல்லாம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தயாராகிவிட்டார் பெத்லகேம் நோக்கிச் செல்ல. அமான் நகரின் அரசி அலியா பன்னாட்டு விமானத் தளத்தில் குழுமியிருந்த அரசு அதிகாரிகள், மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களை வாழ்த்தி விடைபெற்று ஹெலிகாப்டரில் பெத்லகேம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாலஸ்தீனா உள்ளூர் நேரம், காலை 9.20 மணிக்கு பெத்லகேம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்க, ஏற்கனவே அங்கு, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, Fouad Twal உட்பட, பல கிறிஸ்தவத் தலைவர்களும், பிறமதப் பிரதிநிதிகளும் காத்திருந்தனர்.
எருசலேமிலிருந்து 10 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள பெத்லகேம் நகர், எபிரேய மொழியில், 'அப்பத்தின் வீடு' என்ற பொருள் கொண்டது. இங்கு, 25,000 பேர் வாழ்கின்றனர். இயேசு பிறந்த இடமான பெத்லகேம், தாவீது மன்னர் பிறந்த இடமுமாகும். பெத்லகேம் என்ற உலகப் புகழ் வாய்ந்த இந்த நகர், 1995ம் ஆண்டு முதல் Oslo ஒப்பந்தம் வழியாக, பாலஸ்தீன சுய ஆட்சியின் ஒரு பகுதியானது. பாலஸ்தீன அரசுத் தலைவர், மஹ்முத் அப்பாஸ் அவர்கள் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாலஸ்தீன அரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தத் திருத்தந்தையை, மாளிகைக்கு வெளியே வந்து நின்று வரவேற்றார், அரசுத் தலைவர், மஹ்முத் அப்பாஸ் அவர்கள். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அரசுத் தலைவரும் மாளிகையின் முதல் தளத்திற்கு ஏறிச் சென்றனர். அங்கு இரு தலைவர்களுக்கும் இடையே சிறு உரையாடலும், பரிசுப்பொருள்கள் பகிர்தலும் நடைபெற்றன. பின்னர், கீழ் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசுத் தலைவர் திருத்தந்தையை வரவேற்று பேசினார். திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.
இச்சந்திப்பிற்குப் பின், உள்ளூர் நேரம், 10.45 மணிக்கு, பெத்லகேமில் அமைந்துள்ள இயேசு பிறப்பு பசிலிக்காவுக்கு அருகே உள்ள ஒரு திடலுக்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, முதலில் பெத்லகேமின் பெண் மேயர் Vera Baboun சிறிது நேரம் சந்தித்து உரையாடினார். பின்னர், உள்ளூர் நேரம் 11 மணிக்கு, அதாவது, இந்திய நேரம், பிற்பகல் 1.30 மணிக்கு திருப்பலியைத் துவக்கினார் திருத்தந்தை.
இஸ்ரேல் நாட்டின் கலிலேயா, காசா பகுதி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த விசுவாசிகளும், ஆசிய நாடுகளிலிருந்து வந்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் இத்திருப்பலியில் பெருமளவில் கலந்துகொண்டனர்.
திருப்பலியின் இறுதியில், அல்லேலூயா வாழ்த்துரையை வழங்கி, அனைவரோடும் இணைந்து, செபித்தார் திருத்தந்தை. இந்த வாழ்த்துரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீனத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களிடம் சிறப்பான ஓர் அழைப்பை முன்வைத்தார். அதாவது, அவரும், இஸ்ரேல் தலைவர் Shimon Peres அவர்களும் இணைந்து வத்திக்கானுக்கு வந்து, தன்னுடன் இணைந்து, அமைதிக்காகச் செபிக்கும்படி திருத்தந்தை அழைப்பு விடுத்தபோது, கூடியிருந்தோர் எழுப்பிய கரவொலி அடங்க சிறிது நேரம் எடுத்தது. இந்த செப முயற்சிக்கு, தன் இல்லம் திறந்திருக்கும் என்று திருத்தந்தை கூறினார்.
திருப்பலிக்குப்பின், பாலஸ்தீன நாட்டில் உள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பங்களோடு இணைந்து மதிய உணவை அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.