2014-05-25 15:30:32

திருத்தந்தையின் புனித பூமி பயணம் முதல் நாள் மாலை – ஜோர்டான் : புலம் பெயர்ந்தோர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு திருத்தந்தையின் உரை


மே,25,2014. அன்புச் சகோதர, சகோதரிகளே,
என்னுடையத் திருப்பயணத்தில் உங்களைச் சந்திக்க நான் மிகவும் விழைந்தேன். வன்முறையாலும், மோதல்களாலும் உங்கள் இல்லத்தை, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள உங்களைச் சந்திக்க பெரிதும் விழைந்தேன். நீங்கள் இங்கு ஜோர்டான் நாட்டில் வரவேற்பும், பாதுகாப்பும் பெற்றுள்ளீர்கள். உடல் குறையென்ற பாரத்தைச் சுமந்துவாழும் இளையோரே, உங்களைச் சந்திக்கவும் நாம் அதிகம் ஆசைப்பட்டேன்.
நாம் இங்கு சந்திக்கும் இடம், இயேசு திருமுழுக்கு பெற்றதை நினைவுறுத்தும் இடம். மனித நிலையில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்டு, மக்களோடு மக்களாக, பணிவுடன் நின்ற இயேசுவுக்கு, யோவான் திருமுழுக்கு வழங்கினார். காயப்பட்ட மனிதத்தைக் குணமாக்க தன்னையே தாழ்த்திய இயேசுவின் பணிவு, நம்மை என்றும் உணர்ச்சி போங்க வைக்கிறது. இன்றும் மனிதகுலம் அனுபவித்துவரும் கொடுமைகள், மத்தியக் கிழக்குப் பகுதியில் நிகழும் வேதனைகள், நம்மை உணர்ச்சி போங்க வைக்கின்றன. குறிப்பாக, நான் சிரியாவை எண்ணிப் பார்க்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகள் இந்நாடு சந்தித்துவரும் போரினால் எண்ணற்ற இறப்புக்களும், பல கோடி மக்களின் புலம்பெயர்தலும் ஏற்பட்டுள்ளன.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து இங்கு தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு ஜோர்டான் அரசும், மக்களும் அளித்துள்ள வரவேற்பிற்கு நன்றி கூறுகிறேன். வேறுபாடின்றி, எல்லா மதத்தினருக்கும் பணியாற்றிவரும் காரித்தாஸ் போன்ற திருஅவை அமைப்புக்களையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். எல்லா வல்லமையும், கருணையும் நிறைந்த இறைவன், உங்கள் அனைவரையும், உங்கள் முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக!
இந்த இக்கட்டானச் சூழலில், ஆயிரமாயிரம் பலம் பெயர்ந்தோரை ஜோர்டான் நாடு தனியே பாராமரிப்பதற்கு உலக நாடுகள் விட்டுவிடக் கூடாது என்று விண்ணப்பிக்கிறேன். ஜோர்டான் நாட்டிற்கு அனைத்து நாடுகளும் பல்வேறு வகையில் உதவிசெய்ய விண்ணப்பிக்கிறேன்.
சிரியாவில் அமைதி உருவாக, நான் மீண்டும் ஒருமுறை என் மனதார விண்ணப்பிக்கிறேன். ஆயுதங்கள் வழியே தீர்வு காண எண்ணும் குழுக்கள், ஆயுதங்களைக் களைந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களாக! துன்புறும் பல கோடி மக்கள்மீது கருணை கொண்டு, இவர்கள் தங்கள் மோதல்களைத் தவிர்த்து, உரையாடலை மேற்கொள்வார்களாக!
அன்புள்ள இளையோரே, என்னுடன் இணைந்து அமைதிக்காக மன்றாடுங்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் இடர்கள், மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து, அமைதிக்காக வேண்டுங்கள். உங்கள் துன்பங்களையும் தாண்டி, நீங்கள் இவ்வுலகிற்கு நம்பிக்கையின் அடையாளங்களாய் வாழ்கிறீர்கள்! இறைவனின் உள்ளத்தில் உங்களுக்குத் தனியொரு இடம் உண்டு!
நமது சந்திப்பின் முடிவில், நான் மீண்டும் ஒருமுறை வேண்டிக் கேட்கிறேன். உலக நாடுகளின் உதவியுடன், சிரியா தன் உள்நாட்டுப் போரை நிறுத்தி, அமைதியைத் தேடுமாறு வேண்டுகிறேன். உலகில் போரை உருவாக்குவதிலேயே குறியாக இருக்கும் வன்முறையாளர்களுக்கு இறைவன் மனமாற்றம் தருவாராக! அமைதிக்காக உழைப்பவர்களை, இறைவன் தன அனைத்து ஆசீராலும் நிரப்புவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.