2014-05-25 15:30:11

திருத்தந்தையின் புனித பூமி பயணம் 2ம் நாள் – பாலஸ்தீனம் : அரசுத் தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை


மே,25,2014. அரசுத் தலைவரே, அன்பு நண்பர்களே,
அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்கள் அளித்த அன்பான வரவேற்பிற்கு நன்றி. பாலஸ்தீன அரசின் பிரதிநிதிகளுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைதியின் இளவரசர் இயேசு பிறந்த பெத்லகேமுக்கு என்னை அழைத்துவந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
பல்லாண்டுகளாய் மத்தியக் கிழக்குப் பகுதி அனுபவித்து வரும் வேதனைகளையும், காயங்களையும் குணமாக்குவது கடினம். வன்முறைகள் இல்லாதபோதும், இப்பகுதியில் நிலவும் பாதுகாப்பற்றச் சூழல், உரிமை மீறல்களையும், இன்னும் பல வேதனைகளையும் உருவாக்குகிறது.
இத்தகையச் சூழல் விரைவில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே என் ஆழ்ந்த, உறுதியான எண்ணம். பொதுமக்களின் நன்மையை முதன்மையாகக் கொண்டு இருநாடுகளும் அமைதியை உருவாக்க தாராள மனதுடன் முன்வரவேண்டும். பன்னாட்டளவில் வரையறுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எல்லைகளை, இஸ்ரேல், பாலதீனா ஆகிய இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு வாழும் காலம் அண்மித்துள்ளது.
அமைதி, இப்பகுதி மக்களுக்கு அளவற்ற நன்மைகளைக் கொணரும் என்பதால், அந்த அமைதியை நிலைநாட்ட இருதரப்பினரும் தியாகங்களை மேற்கொள்ளவேண்டும். பாலஸ்தீன, இஸ்ரேல் அரசுகளும், மக்களும் இணைந்து, இந்த அமைதிப் பாதையில் நடப்பதற்காக நான் வேண்டிக் கேட்கிறேன்.
இத்தருணத்தில், இந்நாடுகளில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்தைப் பற்றி பேச விழைகிறேன். சமுதாயத்தின் பொது நலனில் அக்கறைகொண்டு, அதை மேன்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்கள், இவ்விரு நாடுகளின் முழுமையான குடிமக்களாக விளங்குகின்றனர்.
அரசுத் தலைவரே, தாங்கள் அண்மையில் வத்திக்கானுக்கு வருகை தந்ததும், நான் தற்போது இங்கு வந்திருப்பதும், நம் இரு நாடுகளிடையே நிலவும் நல்லுறவைத் தெளிவாக்குகிறது. இந்த உறவு அனைவருக்கும் நன்மைதரும் உறவாக விளங்கும் என்பது என் நம்பிக்கை. மத உரிமை உட்பட்ட அனைத்து உரிமைகளையும் அனைவருக்கும் வழங்கும் முயற்சியில் இந்நாடு ஈடுபட்டுள்ளதை நான் பாராட்டுகிறேன். மத உரிமை என்ற அடிப்படை மனித உரிமை வழங்கப்பட்டால், அங்கு அமைதியும், நல்லுறவும் வளரும்.
பெத்லகேமில் கூடியுள்ள அரசுத் தலைவரே, அன்பு நண்பர்களே, உங்கள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக! இந்நாட்டில், வாள்களைக் கலப்பைக் கொழுக்களாக மாற்றும் முயற்சிகள் வெற்றியடையவும், அனைவரும் அமைதிப் பாதையில், வளமான வாழ்வை நோக்கிப் பயணிக்கவும் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! சலாம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.