2014-05-23 17:21:42

மாஸ்கோவில், சிஸ்டின் சிற்றாலயப் பாடகர் குழவினரின் மூன்று நாள் இசை நிகழ்ச்சிகள்


மே,23,2014. திருத்தந்தையின் பாடகர் குழு என்று அறியப்படும் சிஸ்டின் சிற்றாலயப் பாடகர் குழவினர், மே 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்கள், இரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சிகள் வழங்கச் செல்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, மாஸ்கோவிலிருந்து வத்திக்கானுக்கு வருகைதரும் பாடகர் குழுவினர், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் பாட உள்ளனர்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளின் ஓர் அங்கமாக விளங்கும் இசைக்குழுவினர் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறுகின்றது. இதன்படி, 2012ம் ஆண்டு, Westminster ஆங்கிலிக்கன் பாடகர் குழுவும், 2013ம் ஆண்டு, Liepzig லூத்தரன் பாடகர் குழுவும் வத்திக்கானில் இசை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளனர்.
சிஸ்டின் சிற்றாலயப் பாடகர் குழு, மாஸ்கோவில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் பதவியேற்றதன் 5ம் ஆண்டு நினைவாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர் என்றும், இந்தப் பாடகர் குழுவினரும், மாஸ்கோ பாடகர் குழுவினரும் இணைந்து ஜூன் 29ம் தேதி புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் பாடவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.