2014-05-23 17:21:03

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தியப் பிரதமர் கூறிவரும் முதல் எண்ணங்கள் நம்பிக்கையைத் தருகின்றன - பேராயர் ஜான் பார்வா


மே,23,2014. இந்திய மக்கள் புதிதாகத் தேர்ந்தெடுத்திருக்கும் பிரதமர் கூறிவரும் முதல் எண்ணங்கள் நம்பிக்கையைத் தருகின்றன என்றும், அமையவிருக்கும் புதிய அரசின் செயல்பாடுகளை, காத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
இந்தியாவின் கட்டக்-புபனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில், தனிப்பட்ட ஒரு கட்சிக்கு பெரும்பான்மை வாக்குகளை அளித்துள்ள மக்களின் நம்பிக்கை, மிகுதியாக உள்ளது என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி இதுவரை சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசிவந்துள்ளது என்றாலும், தற்போது அக்கட்சி இந்தியா முழுமைக்கும் பொறுப்பேற்கும்போது, பரந்த மனதுடன் செயல்படும் என தான் நம்புவதாக, பேராயர் பார்வா அவர்கள் கூறினார்.
புதியப் பிரதமர் இதுவரை ஆற்றியுள்ள சொற்பொழிவுகளில், அனைத்து இந்தியரையும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லவேண்டும் என்று கூறியிருப்பது நம்பிக்கை தருகிறது என்றும் பேராயர் பார்வா அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.