2014-05-23 17:16:48

திருத்தந்தையின் Twitter செய்தி - "நம் வாழ்வின் கடினமான தருணங்களில் நம்மை இறைவனிடம் ஒப்படைப்பதே நம்பிக்கை"


மே,23,2014. "நம்பிக்கையுடன் வாழ்வது என்பதன் பொருள், நம் வாழ்வை இறைவனிடம் ஒப்படைப்பதே; குறிப்பாக, நம் வாழ்வின் கடினமான தருணங்களில் நம்மை இறைவனிடம் ஒப்படைப்பதே நம்பிக்கை" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக, இவ்வேள்ளியன்று வெளியிட்டுள்ளார்.
மேலும், இவ்வெள்ளி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அங்கு அன்னையின் பீடத்திற்கு முன் 15 நிமிடங்களுக்கும் மேலாக செபத்தில் ஈடுபட்டார்.
தான் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமி திருப்பயணத்தை அன்னையின் பாதுகாவலில் ஒப்படைப்பதற்காக அப்பேராலயம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னையின் பீடத்தில் ஒரு மலர் கொத்தை வைத்துவிட்டுத் திரும்பினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டதற்கும் அடுத்த நாளன்றும், கடந்த ஜூலை மாதம், அவர் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள பிரேசில் நாட்டிற்குச் செல்வதற்கு முன்னரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்றார் என்பது நினைவுகூரத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.