2014-05-22 16:14:32

வாக்குறுதிகளை அளிக்கும் உலக நாடுகள், தங்கள் வார்த்தைகளைச் செயல்படுத்தவேண்டும் - நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Ignatius Kaigama


மே,22,2014. நைஜீரியா நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆதரவு தருகிறோம் என்ற வாக்குறுதிகளை அளிக்கும் உலக நாடுகள், தங்கள் வார்த்தைகளைச் செயல்படுத்தவேண்டும் என்று நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Ignatius Kaigama அவர்கள் கூறினார்.
இச்செவ்வாயன்று Jos நகரின் வர்த்தகச் சந்தையிலும், பேருந்து நிலையத்திலும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்களில் குறைந்தது, 118 பேர் கொல்லப்பட்டனர், மற்றும், 56 பேர் காயமுற்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த இரட்டைத் தாக்குதல் குறித்து, பேராயர் Kaigama அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில், தாக்குதல்கள் தொடர்ந்தாலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களிடையே நல்லுறவு வளர்ந்துவருவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதத்தில், Boko Haram என்ற வன்முறை கும்பலால் 300க்கும் அதிகமான சிறுமிகள் கடத்தப்பட்டபோது, ஐ.நா.அவை உட்பட, பல உலக அமைப்புக்குள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தது, தங்களுக்கு உறுதியைத் தந்தது என்று கூறியப் பேராயர் Kaigama அவர்கள், உலக அமைப்புக்கள் உறுதியளிக்கும் ஆதரவு, செயல்வடிவம் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எடுத்துக்காட்டாக, Boko Haram வன்முறை கும்பலுக்கு ஆயுதங்களை வழங்கும் பிறநாட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு, அந்த அநீதியைத் தடுப்பது உலக அமைப்புக்களின் கடமை என்று நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides/Zenit








All the contents on this site are copyrighted ©.