2014-05-22 16:30:09

மே 24ம் தேதி தூரின் நகரில் "சீனத் திருஅவைக்கென உலக மக்கள் செபிக்கும் நாள்"


மே,22,2014. "சீனத் திருஅவைக்கென உலக மக்கள் செபிக்கும் நாள்" என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் துவக்கி வைத்த முயற்சி, ஏழாவது ஆண்டாக, மே 24, இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
சீனாவில் புகழ்பெற்று விளங்கும் Sheshan மரியன்னை திருத்தலத்தில், மே 24ம் தேதி, சகாய அன்னையின் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்நாளைத் தெரிவு செய்தார்.
2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அவர் வெளியிட்ட ஒரு மடலின் வழியாக, உலக மக்களிடம் அவர் எழுப்பிய இவ்விண்ணப்பம் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
மே 24ம் தேதி கடைபிடிக்கப்படும் இவ்வுலக நாளையொட்டி, இத்தாலியில் வாழும் சீனக் கத்தோலிக்கர்கள், இத்தாலியின் ஏதாவது ஒரு நகரில் கூடி, செபமாலை, திருப்பலி ஆகியவற்றைக் கொண்டாடுவது வழக்கம்.
இவ்வழக்கத்தைத் தொடர்ந்து, இவ்வாண்டு, இயேசுவின் திரு உடலைச் சுற்றியிருந்த துணி வைக்கப்பட்டுள்ள தூரின் நகரின் புகழ்பெற்றத் திருத்தலத்தில் சீனக் கத்தோலிக்கர்கள் கூடிவருவர் என்று ஆசியச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.