2014-05-22 16:18:55

ஜோர்டான் நாட்டிற்குத் தப்பிவந்த ஓர் இஸ்லாமியரும், ஒரு கிறிஸ்தவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் தங்கள் வேதனை மிகுந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர்


மே,22,2014. சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரிலிருந்து ஜோர்டான் நாட்டிற்குத் தப்பிச் சென்ற ஒரு இஸ்லாமியரும், ஈராக் நாட்டிலிருந்து தப்பிவந்த ஒரு கிறிஸ்தவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் தங்கள் வேதனை மிகுந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர் என்று ஜோர்டன் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், Wael Suleiman அவர்கள் கூறினார்.
இயேசு திருமுழுக்கு பெற்ற இடமென கருதப்படும் திருத்தலத்தில், இன்னும் கட்டிமுடிக்கப் பெறாமல் இருக்கும் ஒரு கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற சனிக்கிழமையன்று புலம் பெயர்ந்தோரையும், அகதிகளையும் சந்திக்கும் வேளையில் இப்பகிர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற இரு பிரிவினரையும் சேர்ந்த 400க்கும் அதிகமான மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கவிருக்கிறார் என்பது இம்மக்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளதென்று, Suleiman அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
திருத்தந்தையுடன் நடைபெறும் இச்சந்திப்பினால், இம்மக்களின் வேதனையை இவ்வுலகம் இன்னும் சரியான முறையில் புரிந்துகொள்ளும் என்றும், இதனால், இப்பிரச்சனைக்குத் தகுந்ததொரு தீர்வு கிடைக்கும் என்றும் தான் நம்புவதாக, காரித்தாஸ் இயக்குனர் Suleiman அவர்கள் கூறினார்.
சிரியாவிலிருந்து தப்பிச் சென்ற 13 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களில், 20,000 பேர் ஜோர்டான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், இவர்கள் மீண்டும் சிரியாவின் ஹோம்ஸ், அலெப்போ ஆகிய நகரங்களுக்குத் திரும்பிச் செல்வர் என்ற உறுதி சிறிதும் இல்லை என்றும் Suleiman அவர்கள், கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.