2014-05-22 16:15:43

இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் பொருளாதாரம், புதைமணல் மீது கட்டப்பட்ட ஓர் அமைப்பு - நெதர்லாந்து நாட்டுத் துறவியர் அமைப்பு


மே,22,2014. இவ்வுலகைப் பாதுகாத்து, பராமரிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகின் அனைத்து நாடுகளுக்கும், எதிர்காலத்தை உருவாக்கும் கடமை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உள்ளதென்று, நெதர்லாந்து நாட்டுத் துறவியர் அமைப்பு கூறியுள்ளது.
மே 22, இவ்வியாழன் முதல், 24, இச்சனிக்கிழமை முடிய ஐரோப்பிய பாராளு மன்றத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடப்பதையொட்டி, நெதர்லாந்தின் இருபால் துறவியர் அமைப்பு, திறந்த கடிதம் ஒன்றை, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளது.
மனிதர்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாமல், இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் பொருளாதாரம், புதைமணல் மீது கட்டப்பட்ட ஓர் அமைப்பு என்பதை, இத்துறவியர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சமமற்ற நிலை, ஒதுக்கிவைத்தல் ஆகிய கருத்துக்களுடன் செயல்படும் பொருளாதாரம், மனித குலத்தைக் கொலை செய்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Evangelii Gaudium, அதாவது, 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற தன் திருத்தூது அறிவுரையில் கூறியுள்ள வார்த்தைகளை, இத்துறவியர் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
சமுதாயத்திலிருந்து பல வழிகளில் ஓரம் கட்டப்பட்டுள்ள, நோயுற்றோர், முதியோர், வறியோர் ஆகியோருக்குக் கருணைகாட்டி, உதவிகள் செய்வதைவிட, அவர்களிடம் காணப்படும் தனிப்பட்டத் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றின் வழி நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், நெதர்லாந்து நாட்டு இருபால் துறவியர் அமைப்பு, தன் திறந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.