2014-05-21 16:37:40

திருத்தந்தையின் Twitter செய்தி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு


மே,21,2014. மாசிதோனியா அரசுத் தலைவர், Gjorge Ivanov அவர்களையும், அவரது துணைவியாரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையோடு மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பிற்குப் பின், மாசிதோனியா அரசுத் தலைவர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவு கொள்ளும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
மேலும், "போஸ்னியா-ஹெர்சகொவினா, செர்பியா ஆகிய நாடுகளிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உங்கள் அனைவரையும் செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்ற செய்தியை, தன் Twitter பக்கத்தில், இப்புதன் காலை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியில் ஏற்படாத அளவு, மழைப் பொழிவும், வெள்ளப்பெருக்கும் உருவாகியுள்ளது என்றும், 40 இலட்சம் மக்களைக் கொண்ட செர்பியாவில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
போஸ்னியாவில், 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.