2014-05-21 16:46:21

இலங்கை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்ற தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்


மே,21,2014. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மடுமாதா திருத்தலத்தில் அண்மையில் நடைபெற்ற நான்கு நாள் தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களால் அறிவிக்கப்பட்ட மரியன்னை ஆண்டு அறிக்கையையொட்டி நடைபெற்ற இந்தப் பக்தி முயற்சிகளில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தப் பக்தி முயற்சிகளின் துவக்கமாக, மரியன்னையின் செபமாலை, தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் சொல்லப்பட்டது என்றும், இதைத் தொடர்ந்து, கர்தினால் இரஞ்சித் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மடுமாதா திருத்தலத்தில் ஆகஸ்ட் மாதம் 15ம் கொண்டாடப்படும் திருநாளின்போது, இலங்கை, இந்தியா, மற்றும் அண்மைய நாடுகளிலிருந்து அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது 6 இலட்சம் என்று ஆசியச் செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.