2014-05-21 16:45:44

அகில உலக இயேசு சபையின் தலைவர், அருள் பணியாளர் Nicolás அவர்கள், தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாக அறிவிப்பு


மே,21,2014. கடந்த ஆறு ஆண்டுகள் அகில உலக இயேசு சபையின் தலைவராகப் பணியாற்றிய அருள் பணியாளர் Adolfo Nicolás அவர்கள், தன் தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாகவும், அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், இயேசு சபையின் பொது அவையை 2016ம் ஆண்டு இறுதியில் கூட்டவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தான் 78 வயதை நிறைவு செய்திருப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடும், தன் ஆலோசகர்களோடும், மேற்கொண்ட கலந்துரையாடலின் இறுதியில், தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அருள் பணியாளர் Nicolás அவர்கள், இச்செவ்வாய் மதியம் அனைத்துலக இயேசு சபையினர் அனைவருக்கும் எழுதியுள்ள மடலில் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு சனவரி 19ம் தேதி, உரோம் நகரில் நடைபெற்ற 35வது பொது அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருள் பணியாளர் Nicolás அவர்கள், இயேசு சபையின் அதிகாரக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொணரும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக இயேசு சபையை வழிநடத்தி வருகிறார்.
கூடவிருக்கும் 36வது பொது அவை, 2015ம் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு தயாரிப்பு முயற்சிகளின் முடிவில், 2016ம் ஆண்டு இறுதியில் கூடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.