2014-05-20 15:25:47

புனிதரும் மனிதரே - பதவி துறந்த பணிவுள்ளத் திருத்தந்தை


2013ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் தலைமைப் பொறுப்பைத் துறப்பதாக அறிவித்தபோது, அவருக்கு முன் இதையொத்த முடிவை எடுத்த இரு திருத்தந்தையரைப் பற்றிப் பேசப்பட்டது. 1415ம் ஆண்டு பதவியைத் துறந்த திருத்தந்தை 12ம் கிரகரி அவர்களையும், அதற்கு முன், 1294ம் ஆண்டு பதவியைத் துறந்த திருத்தந்தை 5ம் செலெஸ்டின் அவர்களையும் பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. இவ்விருவரில், திருத்தந்தை 5ம் செலெஸ்டின் அவர்கள், 5 மாதங்களே திருத்தந்தையாகப் பணியாற்றினார்.
இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதே எதிர்பாராத ஒரு திருப்பம் எனலாம். பியெத்ரோ என்ற இயற்பெயர் கொண்ட இவர், தன் 17வது வயதில் புனித பெனடிக்ட் துறவு மடத்தில் சேர்ந்து மிகக் கடுமையான தவங்களால் ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கை நடத்தினார்.
1292ம் ஆண்டு, திருத்தந்தை 4ம் நிக்கோலஸ் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாமல், 6 பேர் கொண்ட கர்தினால்கள் குழு, ஈராண்டுகள் கழித்தது. அப்போது, அருள்பணியாளர் பியெத்ரோ அவர்கள், கர்தினால்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அதாவது, இன்னும் நான்கு மாதங்களில் அவர்கள் அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவில்லையெனில், இறைவனின் கடுமையான தண்டனையை அவர்கள் அடைய வேண்டிவரும் என்பதை இறைவன் தனக்கு வெளிப்படுத்தினார் என்ற செய்தியை அவர் கர்தினால்களுக்கு அனுப்பிவைத்தார்.
80 வயதான முதுபெரும் துறவி பியெத்ரோ அவர்கள் அனுப்பியச் செய்தியைக் கேட்ட கர்தினால்கள், அந்நேரமே அவரை, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இதைச் சற்றும் எதிர்பாராத பியெத்ரோ அவர்கள், கர்தினால்கள் முன் மண்டியிட்டுக் கெஞ்சினார். இருப்பினும் ஆறு கர்தினால்களும் ஒன்றாக இணைந்து, பியெத்ரோ அவர்களை, திருத்தந்தையாக உறுதிப்படுத்தினர்.
5ம் செலெஸ்டின் (Celestine) என்ற பெயருடன் 1294ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமைப் பொறுப்பை ஏற்றத் திருத்தந்தை, 5 மாதங்களில் தன் பொறுப்பைத் துறந்தார். அவருக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற 8ம் போனிபாஸ் அவர்கள், திருத்தந்தை 5ம் செலெஸ்டின் அவர்களை ஒரு கோட்டையில் அடைத்து வைத்தார். ஈராண்டுகள் அந்தக் கோட்டையில் பல்வேறு துன்பங்களைத் தாங்கிய திருத்தந்தை செலெஸ்டின் அவர்கள், 1296ம் ஆண்டு, மே மாதம் 19ம் தேதி இறைவனடி சேர்ந்தார். புனிதத் திருத்தந்தை, 5ம் செலெஸ்டின் அவர்களின் திருநாள் மே மாதம் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.