2014-05-19 16:23:19

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை - எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் செபம் வழியாகத் தீர்வைக் காணவேண்டும்


மே,19,2014. தேவையற்ற உரையாடல், பொறாமை மற்றும் புறந்தள்ளுதல் வழியாக அல்ல, மாறாக, பேச்சுவார்த்தைகள், துணிவுடன் மேற்கொள்ளும் ஆய்வுகள், மற்றும் செபம் வழியாகவே பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம், தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வாளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ 80,000 பேருக்கு ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரச்சனைகளே இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றுவதன் வழியாக அல்ல, மாறாக, அவை இருப்பதை ஏற்றுக்கொண்டு, பேச்சுவார்த்தைகள் வழியாக அதற்குத் தீர்வு காணமுடியும், அதேவேளை, ஒரு பிரச்னையை எவ்விதம் அணுகுவது என்பதே பிரச்சனையாகிறது என்று எடுத்துரைத்தார்.
ஆதிகாலத் திருஅவை, தன் கதவுகளை, கிரேக்க கலாச்சார உலகிற்கு திறந்தபோது, பாரபட்சம் குறித்த, அதாவது, யூத சமுதாயம் நன்முறையிலும் ஏனையோர் பாகுபாட்டுடனும் நடத்தப்படுவதாக, புகார்கள் எழுந்தன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, அத்தகையச் சூழலில் சீடர்கள் ஒன்று கூடி, பிரச்சனையைப் பேசித் தீர்த்தத்தைக் காணமுடிகிறது என்று கூறினார்.
நற்செய்தி அறிவிப்புக்கென தங்களை அர்ப்பணித்தச் சீடர்கள், மக்களுக்கு உணவு வழங்கும் சமூகப் பணிக்கென, நேர்மையான ஏழு தியாக்கோன்கள் அடங்கியக் குழுவை நியமித்து, தீர்வு கண்டனர் என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இன்றையத் திருஅவையின் எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் செபம் வழியாகத் தீர்வைக் காணவேண்டும் என்பதையும் தன் அல்லேலூயா வாழ்த்துச் செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.
Serbia மற்றும் Bosnia என்ற இரு நகரங்களில் அண்மைய வெள்ளப்பெருக்கால் உயிரிழந்த மக்களுக்காகவும், இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செபங்களை எழுப்புமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.