2014-05-19 16:11:57

திருத்தந்தை பிரான்சிஸ் மெக்சிகோ ஆயர்களிடம் - தீமைகளின் சக்திகளுக்கு பயந்துவாழாமல், தலத்திருஅவை சிறப்பான பணியாற்றவேண்டும்


மே,19,2014. மெக்சிகோ நாட்டின் 200வது ஆண்டு சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள், மற்றும் அந்நாட்டில் உருவான புரட்சியின் நூறாவது ஆண்டு நினைவுகள், ஆகியவை, அந்நாட்டின் சமூக நீதி, அமைதி மற்றும் சுதந்திரக் குடியரசு ஒன்றிப்பிற்காக நம்மை இணைக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ ஆயர்களிடம் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் Ad Limina சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த மெக்சிகோ ஆயர்களை, இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்கு வழங்கியச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
தீமைகளின் சக்திகளுக்கு பயந்துவாழாமல், மெக்சிகோவின் கிறிஸ்தவ அடிப்படை விழுமியங்களைத் தூண்டியெழுப்பி, வருங்காலத்தை அமைக்க உதவுவதில், தலத் திருஅவை சிறப்பான பணியாற்றவேண்டும் என்று திருத்தந்தை ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் என்ற கலாச்சாரக் கூறுகள் வழியாக, நாட்டில், குறிப்பாக, இளையோரிடையே இணக்கவாழ்வைக் கொணர்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஏழைகள், வேலையற்றோர், புலம் பெயர்ந்தோர், விவசாயிகள், மனித வர்த்தகத்தால் பாதிக்கப்படுவோர் ஆகியோரின் உரிமைகளுக்காக உழைப்பதுடன், அர்ப்பண உணர்வுடன் ஆற்றவேண்டிய இத்தகைய உழைப்பிற்காக பொதுமக்களை நன்முறையில் தயாரிக்கவும் தலத்திரு அவைக்கு இருக்கும் கடமையைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.