2014-05-19 16:00:20

திருத்தந்தை : நம் இதயங்கள் எங்கே நிலைபெற்றிருக்கின்றன?


மே 19, 2014. நம் இதயங்கள், நாம் கடவுள்களாக எண்ணும் பொருட்களிலா அல்லது தூய ஆவியிலா நிலைபெற்றிருக்கின்றன என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் ஆற்றிய வல்லச் செயல்களைக் கண்ட புறவினத்தார், அவரையும் புனித பர்னபாவையும் கடவுள்களாகக் கருதினர், இதனால், தான் கடவுளல்ல சாதாரண மனிதனே என்பதை அவர்களுக்கு விளக்க, புனித பவுல் சிரமப்படவேண்டியிருந்தது என்றார்.
தன் அனைத்து நடவடிக்கைகளிலும் உறுதியுள்ளவராக புனித பவுல் நிலையாய் இருந்ததற்கு தூய ஆவியாரேக் காரணம், அவரே புனித பவுலின் இதயத்தில் இருந்துகொண்டு அவரை வழி நடத்தினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்வின் துன்பங்களுக்குப் பயந்து இயேசுவுக்கு சாட்சி பகராமல் செல்லும் மனநிலையை நாம் பெற்றிருக்கின்றோமா அல்லது புனித பவுலைப்போல் உறுதியான மனநிலையைக் கொண்டு அங்கு தூய ஆவிக்கு இடமளித்திருக்கின்றோமா என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டிய நேரமிது எனவும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.