2014-05-16 15:56:20

திருத்தந்தை மேற்கொள்ளும் புனித பூமி திருப்பயணத்தைக் குறித்து அருள்பணி Federico Lombardi


மே,16,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களும் 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே' என்ற கிறிஸ்தவ ஒன்றிப்புச் செபத்தை இயேசுவின் புனிதக் கல்லறையில் இணைந்து சொல்வது, திருத்தந்தை மேற்கொள்ளும் புனித பூமி திருப்பயணத்தின் சிகரமாக அமையும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi அவர்கள் கூறினார்.
மே மாதம் 24 முதல் 26 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமித் திருப்பயணத்தின் விவரங்களை இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த இயேசு சபை அருள்பணி லோம்பார்தி அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையுடன், திருத்தந்தை நான்கு முறை சந்திப்பார் என்று அறிவித்தார்.
இஸ்ரேல் அடிப்படைவாதக் குழுக்கள் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை அண்மையில் சேதமாக்கியுள்ள நிகழ்வு, இத்திருப்பயணத்தை எவ்வகையிலும் பாதிக்காது, ஏனெனில், இச்செயல்களை கிறிஸ்தவர், யூதர் அனைவரும் கண்டனம் செய்துள்ளனர் என்று அருள்பணி லோம்பார்தி விளக்கினார்.
திருத்தந்தையின் பயணத்தின்போது பாதுகாப்பு மிக அதிகமாகத் தேவைப்படுமா என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழக்கம்போல், ஒரு சாதாரண வாகனத்தையே பயன்படுத்துவார் என்பதைக் கூறி, பாதுகாப்பு அச்சங்கள் தேவையில்லை என்று தான் நம்புவதாகவும் அருள்பணி லோம்பார்தி தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.