2014-05-16 16:03:23

சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை அரசு பாதுகாக்கவேண்டும் - பாகிஸ்தான் தேசியக் கழகம் எடுத்துள்ள முடிவு


மே,16,2014. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களையும், புனிதப் பொருட்களையும் அரசு பாதுகாக்கவேண்டும் என்று பாகிஸ்தான் தேசியக் கழகம் எடுத்துள்ள முடிவு வரவேற்கத் தக்கது என்று இஸ்லாபாத்-இராவல்பிண்டி ஆயர் Rufin Antony அவர்கள் கூறினார்.
வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்து தேசியக் கழகம் இவ்வியாழனன்று எடுத்துள்ள இம்முடிவை ஏற்பதிலும், மறுப்பதிலும் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்று ஆசியச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
இந்தப் பாதுகாப்புப் பணிக்கு, தனிப்படை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று இக்கழகம் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை, கிறிஸ்தவர், இந்துக்கள் ஆகிய சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், பல இஸ்லாமியக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் வரவேற்றுள்ளனர்.
எந்த ஒரு வழிபாட்டுத் தலமும் பாதுகக்கப்படவேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டத்தில் ஏற்கனவே ஒரு முக்கிய அங்கம் என்றும், இத்தகையப் புதியச் சட்டங்கள் தேவையில்லை என்றும் கூறிய முன்னாள் அமைச்சரும், கத்தொலிக்கருமான Paul Bhatti அவர்கள், இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டுவது மட்டுமே தாக்குதல்கள் ஏற்படாமல் காக்கும் வழி என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.