2014-05-16 16:01:46

கத்தோலிக்க ஆசிரியர்களின் பணி, திருஅவைக்கு மட்டுமல்ல, உலகின் வருங்கால நன்மைக்கும் மிகவும் அவசியம் - கர்தினால் பரோலின்


மே,16,2014. உருவாக்கம் என்ற முக்கியப் பணியின் இதயத் துடிப்பாக விளங்குபவர் இயேசு என்பதால், அவரிடம் பாடங்களைப் பயில நாம் செல்லவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 15, இவ்வியாழன் முதல், 18 இஞ்ஞாயிறு முடிய Bosnia Herzegovinaவின் தலைநகர் Sarajevoவில் நடைபெறும் கத்தோலிக்கக் கல்விக் கருத்தரங்கிற்கு, கத்தோலிக்கக் கல்வி திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Zenon Grocholewski அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறினார்.
இக்கருத்தரங்கிற்குத் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள், கத்தோலிக்க ஆசிரியர்களின் பணி, திருஅவைக்கு மட்டுமல்ல, உலகின் வருங்கால நன்மைக்கும் மிகவும் அவசியம் என்று தன் செய்தியில் கூறியுள்ளார்.
ஐரோப்பியக் கத்தோலிக்கக் கல்விப்பணிக் கழகமும், Bosnia Herzegovina ஆயர் பேரவையும் இணைந்து நடத்திவரும் இந்தக் கருத்தரங்கின் துவக்கத் திருப்பலியை, Sarajevo பேராயர் கர்தினால் Vinko Puljic அவர்கள் தலைமையேற்று நடத்தியபோது, எதிர்காலம் கடவுளுக்கு உரியதே, எனவே அஞ்சாதீர்கள் என்ற கருத்தில் மறையுரை வழங்கினார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1914ம் ஆண்டு, முதல் உலகப் போர் துவங்கக் காரணமான நகரான Sarajevo, கடந்த நூற்றாண்டில் பல்வேறு போர்களைச் சந்தித்துள்ளது என்றும், உலகில் போர்கள் நிகழாமல் இருக்க, கல்வி ஒரு முக்கிய கருவியாக அமையவேண்டும் என்றும் கர்தினால் Puljic அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.