2014-05-15 15:54:49

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றிய நூல்கள், கிறிஸ்தவம் என்ற எல்லையைத் தாண்டி, அனைவரையும் ஈர்த்துள்ளன - வத்திக்கான் நூலக இயக்குனர்


மே,15,2014. வத்திக்கானில் ஆரம்பித்த 'பிரான்சிஸ் தாக்கம்' என்ற அலையினால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றிய நூல்கள், கிறிஸ்தவம் என்ற எல்லையைத் தாண்டி, அனைவரையும் ஈர்த்துள்ளன என்று வத்திக்கான் நூலக இயக்குனர் அருள்பணி Giuseppe Costa அவர்கள் கூறினார்.
பல்வேறு நாடுகளில் ஏற்பாடு செய்யப்படும் அகில உலக நூல் கண்காட்சி, இவ்வாண்டு மே மாதம் 8 முதல் 12ம் தேதி முடிய இத்தாலியின் தூரின் நகரில் நடைபெற்றது.
இத்திங்களன்று முடிவுபெற்ற இந்த நூல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பீடம் முதன் முறையாக அழைக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிட்ட அருள்பணி Costa அவர்கள், இந்த அழைப்புக்கு ஒரு முக்கிய காரணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது இவ்வுலகம் கொண்டுள்ள ஈர்ப்பு என்று கூறினார்.
இந்த நூல் கண்காட்சியைப் பார்வையிடச் சென்றிந்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில், திருத்தந்தை அவர்கள் உலகின் கவனத்தைத் தன் மீது திருப்புவதற்கு, அவரிடம் காணப்படும் தொடர்புத் திறமையைவிட, அவரிடம் விளங்கும் நற்செய்தி அதிகாரமே முக்கியக் காரணம் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவைத் தலைவராக பணியாற்றிய முதல் ஆண்டில், அவர் எண்ணங்களைத் தாங்கிய 111 நூல்களும், அவரைப் பற்றிய 139 நூல்களும் இத்தாலியில் மட்டும் வெளியாகியுள்ளன என்று CNA கத்தோலிக்க செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.