2014-05-15 15:54:15

கிறிஸ்தவ யூத உறவுகளை உறுதியாக்க திருத்தந்தையர் மேற்கொண்ட முயற்சிகள், தற்போதையத் திருத்தந்தையால் இன்னும் ஆழப்படும் - இஸ்ரேல் நாட்டின் தூதர்


மே,15,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம், இஸ்ரேல் நாட்டில் பல்சமய உரையாடல், அமைதி என்ற நேர்மறை உணர்வுகளை வளர்க்கும் என்று, திருப்பீடத்தில் இஸ்ரேல் நாட்டின் தூதராகப் பணியாற்றும் Zion Evrony அவர்கள் தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
இச்செவ்வாயன்று, உரோம் நகரில் உள்ள பன்னாட்டுத் தூதர்களுக்கு காலை விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்ரேல் தூதர் Evrony அவர்கள், திருத்தந்தையின் இப்பயணம், இஸ்ரேல், வத்திக்கான் என்ற இரு நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள், யூதர்கள் மத்தியிலும் உறவுகளை வளர்க்க பெரும் உந்து சக்தியாக அமையும் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன், அர்ஜென்டீனா நாட்டில் இஸ்லாமியர், யூதர் ஆகிய பிற மதத்தினருடன் மிகுந்த மதிப்பு கொண்டு, அவர்களுடன் உரையாடல்களை மேற்கொண்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய Evrony அவர்கள், கர்தினாலாக அவர் கொண்டிருந்த அனுபவங்கள், இந்தப் பயணத்தில் வெளிப்படும் என்பதை எடுத்துரைத்தார்.
யூதர்களின் துன்பங்களை நன்கு அறிந்த திருத்தந்தை 23ம் ஜான், இஸ்ரேல் நாட்டுக்குப் பயணங்கள் மேற்கொண்ட திருத்தந்தையர் ஆறாம் பவுல், 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர் கிறிஸ்தவ யூத உறவுகளை உறுதியாக்க மேற்கொண்ட முயற்சிகள், தற்போதையத் திருத்தந்தையால் இன்னும் ஆழப்படும் என்ற நம்பிக்கையை இஸ்ரேல் தூதர் Evrony அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.