2014-05-15 15:47:15

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் தேடும் பல்லாயிரம் மக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும் - இயேசு சபை அருள்பணி Giovanni La Manna


மே,15,2014. துருக்கியின் சுரங்க விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்காகவும், மத்தியத் தரைக்கடல் கப்பல் விபத்தில் இறந்தவர்களுக்காகவும் செபிப்போம் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் இரவு வெளியிட்டார்.
துருக்கியில் இடம்பெற்ற சுரங்க விபத்தைக் குறித்தும், மத்தியத் தரைக் கடலில் புலம்பெயர்ந்தொரைச் சுமந்து வந்த கப்பல் மூழ்கிய விபத்தைக் குறித்தும் தன் புதன் பொது மறையுரையின் இறுதியில் விண்ணப்பச் செபங்களை எழுப்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே கருத்துக்களை தன் Twitter செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, அமைதியும் பாதுகாப்பும் அற்ற நாடுகளை விட்டு தப்பித்து, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் தேடும் பல்லாயிரம் மக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று, இயேசு சபையினர் நடத்தி வரும் புலம் பெயர்ந்தோர் பணி இத்தாலியப் பிரிவின் இயக்குனரான அருள்பணி Giovanni La Manna அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐரோப்பாவை வந்தடைவதற்கு, இத்தாலியின் லாம்பதூசா தீவை ஒரு வாயிலாகப் பயன்படுத்தும் புலம் பெயர்ந்தோரைக் காக்கும் பணியில் இத்தாலிய அரசு ஆற்றும் பணிகளைப் பாராட்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி, Cecilia Malmström அவர்கள், இவ்வொன்றியத்தின் அனைத்து நாடுகளும் இணைந்து தக்கதொரு முடிவை எடுக்கும் அவசரம் உருவாகியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.