2014-05-14 16:30:59

வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தியை, இயந்தரங்களிடம் கொடுப்பது மிகுந்த ஆபத்தான போக்கு - பேராயர் சில்வானோ தொமாசி


மே,14,2014. தொழிநுட்பத்தில் மாபெரும் கண்டுபிடிப்புக்களை மனிதகுலம் சாதித்திருந்தாலும், இவற்றில் பல, அழிவுக்குப் பயன்படும் கண்டுபிடிப்புக்கள் என்ற உண்மை வேதனை தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில், நிரந்தப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், கொடுமையான அழிவுக் கருவிகள் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் இச்செவ்வாயன்று பேசுகையில் இவ்வாறு கூறினார்.
தொழில் நுட்பத்தில் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் நல்ல எண்ணங்களுடன் துவங்கியிருந்தாலும், நாளடைவில், அவை, மனிதர்களின் சுயநலத்தால் அழிவை நோக்கி இட்டுச் செல்லும் தொழில் நுட்பங்களாக மாறியுள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார் பேராயர் தொமாசி.
வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தியை, மனிதர்களிடமிருந்து அகற்றி, இயந்தரங்களிடம் அந்த முடிவுகளை கொடுப்பது மிகுந்த ஆபத்தான போக்கு என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள் ஓர் எச்சரிக்கையாகக் கூறினார்.
'செயற்கை அறிவுத்திறன்' (Artificial Intelligence) என்ற அறிவியல் களத்தில் நாம் பெற்றுள்ள வெகு வேகமான முன்னேற்றங்களை மறு பரிசீலனை செய்வதற்கு இது தகுந்த நேரம் என்று கூறிய பேராயர் தொமாசி அவர்கள், வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கும் சக்தியை நல்ல மனமும், சிந்தனையும் கொண்ட மனிதர்கள் விரைவில் திரும்பப் பெறுவது அவசரமான ஒரு முயற்சி என்பதை, தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.