2014-05-14 16:34:48

போதுமான தூக்கமின்மையால் தொற்றுநோய்கள் மட்டுமல்ல, புற்றுநோய்கூட ஏற்படலாம் - அறிவியலாளர்கள் எச்சரிக்கை


மே,14,2014. தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனித நலத்தைப் பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக அனைத்துலக மருத்துவ அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், மேன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாகத் தூங்குவதாக கூறும் அறிவியலாளர்கள், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கின்றனர்.
குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், மோசமான நோய்கள் உருவாகும் என்பது எந்த அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மையோ, அதே அளவுக்கு போதுமான தூக்கமின்மை உடல் நலனில் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல, புற்றுநோய்கூட ஏற்படலாம் என்றும் இந்த அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மாலை நேரத்தில் தொடுதிரை கணினி அல்லது தொடுதிரை செல்லிடபேசித் திரைகளை மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்கு வெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும்படியும் அறிவியலாளர்கள் யோசனை தெரிவித்திருக்கினறனர்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.