2014-05-14 16:27:35

ஆயர்பணியில் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கர்தினால் Valliniக்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


மே,14,2014. திருத்தந்தையின் சார்பில் உரோமையின் ஆயராகப் பணியாற்றும் தங்களை இறைவன் எனக்கு அளித்த ஒரு கொடையாகக் கருதுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Agostino Vallini அவர்களை வாழ்த்தினார்.
கர்தினால் Vallini அவர்கள், ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட 25வது ஆண்டு நிறைவை இச்செவ்வாயன்று கொண்டாடியதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், கர்தினால் Vallini அவர்கள் இவ்வாண்டு ஜூலை மாதம் தன் அருள்பணி வாழ்விலும் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை நினைவு கூர்ந்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் கர்தினால் Vallini அவர்களின் தந்தையை, குடும்பத்திலிருந்து பிரித்து ஜெர்மனிக்குக் கொண்டு சென்றதையும், பின்னர் சில ஆண்டுகளில், அவர் தன் தாயை இழந்ததையும் தன் மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இத்தகையத் துன்பங்கள் மத்தியிலும், கர்தினால் Vallini அவர்கள் தன் நம்பிக்கையை இழக்காமல், இறைவனின் அழைப்பை ஏற்றதைப் பாராட்டியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கர்தினால் Vallini அவர்களை, தன் சார்பில் பணியாற்ற, உரோமையின் ஆயராக நியமித்ததையும், தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதும், அவர் வகித்து வந்த அதே பொறுப்பில் அவரை உறுதி செய்ததையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்து மடலில் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
திருஅவை சட்டங்களில் தகுந்த தேர்ச்சி பெற்றிருந்தாலும், கர்தினால் Vallini அவர்கள், ஓர் ஆயருக்குரிய பாசத்துடன் மக்களை அணுகி பணியாற்றி வருவதையும் தன் மடலில் பாராட்டியுள்ள திருத்தந்தை, அவருக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.