2014-05-14 15:38:35

அமைதி ஆர்வலர்கள் – 1925ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


மே,14,2014. பிரித்தானியரான Sir Joseph Austen Chamberlain, அமெரிக்கரான Charles Gates Dawes ஆகிய இருவரும் இணைந்து 1925ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றாலும் இவ்விருவருக்கும் இவ்விருது 1926ம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. ஏனெனில் 1925ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் ஒருவர்கூட, இவ்விருது பற்றி ஆல்பிரட் நொபெல் அவர்கள், தனது உயிலில் எழுதி வைத்துள்ள விதிகளை நிறைவேற்றவில்லை என, நார்வே நொபெல் விருது தேர்வுக் குழு அறிவித்தது. இந்நிலையில் இவ்விருதை அதற்கு அடுத்த ஆண்டுவரை வைத்திருக்கலாம் என்பது நொபெல் அமைப்பின் விதிமுறைகளாகும். 1925ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற Sir Joseph Austen Chamberlain, தனது பொது வாழ்வின் 45 வருடப் பணியில் முதல் பகுதியை உள்நாட்டு விவகாரங்களுக்காகவும், அடுத்த பகுதியை அனைத்துலக விவகாரங்களுக்காகவும் அர்ப்பணித்திருந்தார். பேரரசைக் கட்டுபவர் என்று புகழ்பெற்ற பிரித்தானிய அரசியல் மேதையான Joseph Chamberlain என்பவரின் மூத்த மகன் Austen Chamberlain.
1863ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த Austen, கேம்பிரிட்ஜ், பாரிஸ், பெர்லின் ஆகிய பிரபலமான பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று 1887ம் ஆண்டில் பிர்மிங்காம் திரும்பினார். தனது தந்தையின் தனிப்பட்ட செயலராகப் பணியைத் தொடங்கிய Austen, 29 வயது நடந்தபோதே பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகும் தகுதியடைந்தார். பிர்மிங்காமுக்கு அருகிலுள்ள Worcestershire கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 1914ம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே, மேற்கு பிர்மிங்காம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகி, 1937ம் ஆண்டில் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார் Austen. இவர் தனது திறமைகளால் விரைவில் புகழடைந்தார். பிரிட்டன் அரசில் பல முக்கிய பதவிகளை வகித்தார் இவர். Herbert Asquith என்பவர், 1915ம் ஆண்டில், நேசநாடுகளின் கூட்டமைப்பு அரசை உருவாக்கியபோது இந்தியாவின் அரசுச் செயலர் பதவியை Austen ஏற்றுக்கொண்டு 1917ம் ஆண்டில் அப்பதவியிலிருந்து விலகினார். 1918ம் ஆண்டின் தேர்தலுக்குப் பின்னர் David Lloyd George கூட்டணி அரசை அமைத்தபோது அவர், Austenஐ தனது Exchequer துறையின் தலைவராக்கினார். Exchequer துறை என்பது, அக்காலத்தில் பிரித்தானிய அரசில் வரி வசூலிப்பது மற்றும் பிற அரசின் வருவாய்களை நிர்வகிக்கும் துறையாகும். 1919ம் ஆண்டு முதல் 1921ம் ஆண்டுவரை இப்பதவியில் இருந்த இவர், முதல் உலகப்போரின்போது வாங்கப்பட்ட பெருமளவான கடன்களைக் கட்டினார், நாட்டின் நிதி அமைப்பு சீராக இருக்குமாறு கவனித்துக் கொண்டார் மற்றும் தேசிய வருவாயையும் மேம்படுத்தினார்.
முதல் உலகப்போருக்குப் பின்னர் Austen Chamberlain ஆற்றிய பணிகள் மிகவும் முக்கியமானவை. 1921ம் ஆண்டில் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். அதே ஆண்டில் பிரதமர் Lloyd Georgeடன் சென்று Sinn Fein குழுவின் கருத்தரங்கில் கலந்து கொண்டு அயர்லாந்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 1925ம் ஆண்டில் பல முக்கிய ஐரோப்பிய நாடுகளுடன், பாதுகாப்பு மற்றும் வணிகம் குறித்த பல ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு உதவும் Locarno உடன்பாடு உருவாகச் செய்தார். ஜெர்மனியை மதித்து அந்நாட்டுடன் கலந்துரையாடினால் மட்டுமே, ஜெர்மனியில் நிரந்தர அமைதி ஏற்படும் என்பதில் உறுதியாய் இருந்தார். நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி அங்கம் வகிக்கவும் உதவினார் Austen Chamberlain. 1937ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி உயிரிழந்த Austen Chamberlain, 1925ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றவர்.
Austen Chamberlainடன் சேர்ந்து 1925ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றவர் Charles Gates Dawes(ஆக.27,1865-ஏப்.23,1951). Charles Dawes, தனது வாழ்வில் இருவிதப் பணிகளை மேற்கொண்டார். தொழிலிலும் நிதித்துறையிலும் கவனம் செலுத்தியதோடு, அரசுப் பணியிலும் ஈடுபட்டிருந்தார். 1926ம் ஆண்டில் இவர் தனக்குரிய 1925ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றபோது அவரது புகழ் உச்சத்தில் இருந்தது. அச்சமயத்தில் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவி அரசுத்தலைவராக இருந்தார். ஜெர்மனியை சீர்படுத்துவது குறித்து 1924ம் ஆண்டில் இவர் வெளியிட்ட அறிக்கை பன்னாட்டு அளவில் பெருமளவில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. நிதி விவகாரங்களில் திறமையுடையவர் என்ற புகழையும் பெற்றிருந்தார்.
Charles Dawes தனது வாழ்வில் இருவேறு துறைகளில் திறமையானவராகச் செயல்படுவதற்கு அவரது குடும்பப் பின்னணியும் ஒரு காரணம். இவரது தந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டு உள்நாட்டுச் சண்டையின்போது திறமையான இராணுவத் தளபதியாகச் செயல்பட்டார். மேலும், ஓகியோ மாநிலத்தில் மரியட்டா மர நிறுவனத்தையும் சொந்தமாக வைத்திருந்தார் இவரது தந்தை. Charles Dawesன் மாமாவும் புகழ்பெற்ற வங்கி அதிகாரியாகத் திகழ்ந்தவர். சட்டம் பயின்ற Dawes, சட்டத்துறையில் இறங்காமல் அக்காலத்தில் வேகமாக வளர்ந்துவந்த பொருளாதாரத் துறையில் இறங்கினார். 1887ம் ஆண்டில் லிங்கன் சென்ற இவர் ஏழு ஆண்டுகளில் சிறந்த, திறமையான தொழிலதிபர் எனப் பெயர் எடுத்தார். அந்நகரின் வங்கியின் இயக்குனராகச் செயல்பட்டு அந்நகரின் தொழில் நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவரும் இவரது சகோதரர்களும் அந்நாட்டின் பத்து மாநிலங்களில் 28 எரிவாயு நிறுவனங்கள் மற்றும் மின்சார அமைப்புக்களைக் கொண்டிருந்தனர். 1902ம் ஆண்டில் தனது தொழில் நிறுவனங்களை தனது சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு வங்கித்துறையில் கவனம் செலுத்தினார். Illinois மத்திய வங்கியை உருவாக்கி அதன் தலைவரானார். இது Dawes வங்கி எனவும் அழைக்கப்படுகிறது. 1917ம் ஆண்டில் இவர் இறக்கும்வரை அவ்வங்கியின் நிர்வாகத்தில் முழுக் கவனம் செலுத்தினார்.
அமெரிக்க அரசில் பல முக்கிய பொறுப்புக்களைக் கொண்டிருந்த Charles Dawes 1924 முதல் 1932 வரை பொதுநலச் சேவைக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார். 1925 முதல் 1929 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவி அரசுத்தலைவராகப் பணிசெய்த காலத்தில், 1929ம் ஆண்டில் தொமினிக்கன் குடியரசு நாட்டின் நிதி அமைப்பு முன்னேறுவதற்கு உதவினார். 1930ல் இலண்டன் கடற்படை கருத்தரங்கிற்கு அமெரிக்கப் பிரதிநிதியாகச் சென்றார். 1932ல் ஜெனீவாவில் நடந்த ஆயுதக்களைவு கருத்தரங்கிற்கு அமெரிக்கப் பிரதிநிதிக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். Dawes தனது 67வது வயதுவரை வணிக மற்றும் அரசியல் உலகில் முழுநேரப் பணி செய்தார். 9 நூல்கள் எழுதியுள்ளார், இசையில் சிறந்திருந்தார், அதேசமயம் தனது குடும்ப வாழ்விலும் பிள்ளைகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்தினார். முதல் உலகப் போரின்போது ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்ச்காரர்களுக்கும் கட்டவேண்டிய பெரிய கடன்தொகை கட்டப்பட Dawes செய்த உதவி மகத்தானது.








All the contents on this site are copyrighted ©.