2014-05-13 18:07:06

வெனிஸ் நகர் முன்னாள் முதுபெரும் தந்தை இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


மே 13,2014. வெனிஸ் நகர முன்னாள் முதுபெரும் தந்தை கர்தினால் Marco Cè அவர்களின் மரணத்தையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அம்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைந்த கர்தினாலுக்கான செப உறுதிகளையும், அவர் உறவினர்கள் மற்றும் மறைமாவட்ட மக்களுக்கான ஆறுதலையும் தன் இரங்கற்தந்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாண்டு மார்ச் 19ம்தேதி முதல் உடல் நலக்குறைவு காரணமாக வெனிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்தினல் Marco Cè அவர்கள், திங்கள் இரவு உள்ளூர் நேரம் 8 மணி 10 நிமிடங்களுக்கு இறைபதம் சேர்ந்ததாக வெனிஸ் முதுபெரும்தந்தை ஃபிரான்செஸ்கோ மொராலியா அவர்கள் தெரிவித்தார்.
1925ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி இத்தாலியின் Crema மறைமாவாட்டத்தில் உள்ள Izano எனுமிடத்தில் பிறந்த கர்தினால் Cè அவர்கள், உரோமை கிரகோரியன் பாப்பிறைப் பலகலைக்கழகத்தில் உயர் படிப்பை முடித்தார். 1948ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1979ம் ஆண்டு புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
23 ஆண்டுகள் வெனிஸ் நகரின் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றிய கர்தினால் Cè அவர்கள், 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கூட, குருக்களுக்குத் தியானமளித்தல் போன்ற மேய்ப்புப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திங்கள் இரவு இறைபதம் சேர்ந்த கர்தினால் Cè அவர்கள், கடந்த மாதம் 13ம் தேதி குருத்து ஞாயிறன்று, நோயில் பூசுதல் என்ற இறுதி திருவருட்சாதனத்தை பெற்றார் என அறிவித்தார் தற்போதைய வெனிஸ் முதுபெரும் தந்தை மொராலியா.
கர்தினால் Cè அவர்களின் மறைவுடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 215 ஆகக் குறைந்துள்ளது. இதில் 120 பேர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.